கூடாத குறியும் மார்க்க நெறியும்..!

கூடாத குறியும் மார்க்க நெறியும்..!
(பாகம்- 1)
(கட்டுரை: மர்ஹும். அ. ஜமாலுத்தீன் எம். ஏ. எம்.ஃபில்.)
பேராசிரியர், வக்ஃப் வாரியக் கல்லூரி, மதுரை) 



குறி என்னும் குறிக்கோள்

அல்லாஹ்வை அஞ்சி அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து ஈடேற்றம் பெறுவதுவே ஒவ்வொரு முஸ்லிமுடையவும் குறியாக - இலட்சியமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் எனக் கூறிக் கொண்டு, அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தராத ஷைத்தானுடைய வழிகேட்டில் சிக்கித் தவிக்கின்றவர்களையும் நாம் காண்கிறோம். அத்தகைய வழிகேடுகளுள் தலையாயவைகளாகத் திகழ்வன ஜோதிடம் கேட்பது, குறிபார்ப்பது, சகுனம் பார்ப்பது முதலியவையாகும்.

நமது நம்பிக்கையும் பொறுப்பும்

மனிதன் தனக்கும், தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், நன்மையையே நாடும் இயல்புடையவன். அதுபோலவே, தீமை நிகழ்ந்து விடக்கூடாது என்பதிலும் குறியாயிருப்பவன் அவன். நன்மையை ஆக்கிக் கொள்ளவும், தீமையைப் போக்கிக் கொள்ளவும் மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நன்மையோ தீமையோ அல்லாஹ் நிர்ணயித்துள்ளவாறுதான் நிகழும் எனும் உறுதிப்பாட்டை ஈமானின் அம்சமாக ஏற்றுக் கொண்டுள்ளமை நமது தனிச்சிறப்பாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த காலத்திலிருந்து படிப்பினை பெற்று நிகழ்கால வாழ்க்கையை அல்லாஹ்வுக்குப் பொருத்தாமன வகையில் அமைத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.

-: மறைக்கப்பட்ட மறுமை ஞானம் :-

வருங்காலத்தைப் பற்றிய ஞானம் மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை. அடுத்த கணம் என்பது தற்போது தொடங்கி கியாமநாள் வரையிலுமுள்ள காலமாகிய வருங்காலத்தைப் பற்றிய முழு ஞானமும் அல்லஹ்வுக்கே உரியதாகும். நபி(ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு கியாமநாளைப் பற்றி எச்சரிக்கை செய்தார்கள். இதைக் கேட்டவர்கள், 'நீர் அல்லாஹ்வினுடைய தூதர் என்பது உண்மையானால் அந்த கியாம நாள் எப்போது வரும் என்பதைக் கூற முடியுமா?' என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மறுமை நாள் பற்றிய ஞானம் எனக்குக் கிடையாது. அது அல்லாஹ்விடமே உள்ளது. நான் உங்களுக்கு அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கிறேன்' எனக் கூறினார்கள். இதை அறிவிக்கக் கூடிய ஏராளமான வசனங்கள் அருள்மறை குர்ஆனில் உள்ளன. (பார்க்க அத்தியாயம் 79 ஸூரத்துன் நாஜியாத் - 43, 44, 45, 46 ஆம் வசனங்கள்).

நாளை நடப்பதே நாயனே அறிவான். கியாம நாள்பற்றிய ஞானம் மட்டுமல்ல. அடுத்த கனம் அல்லது நாளைய தினம் என்ன நிகழும் என்பது பற்றிய மறைவான ஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். எதிர்காலத்தை அறிந்திருத்தலாகிய அல்லாஹ்வுடைய இத்தனியாற்றலில் வேறு எவருக்கேனும் பங்கு இருக்கிறது என எண்ணுவதும், செயல்படுவதும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்னும் மா பாவத்தின் பால் மனிதனைத் தள்ளி விடக்கூடியதாகும்.

வல்லோன் வழங்கிய முன்னுணர் ஞானம்

இறைவனுடைய படைப்புகளிளெல்லாம் மகோன்னத படைப்பாகிய நபி(ஸல்) அவர்களுக்குக் கூட எதிர்காலத்தைப் பற்றிய முழு ஞானமும் இருந்ததில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள், வருங்காலத்தில் இன்னின்னவாறு நிகழும் என்பதாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். இவை அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்களுக்குக் பிரத்யேகமாக அறிவுறுத்தப்பட்டவையாகும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டவைத் தவிர வேறு எதனையும் நபி(ஸல்) அவர்கள் அறிந்திருக்கவில்லை.

'நான் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர்களில் நூதனமானவன் அல்லன்: மேலும் என் சம்பந்தமாகவும் உங்கள் சம்பந்தமாகவும் (வருங்காலத்தில்) யாது செய்யப்படும் என்பதை நான் அறியேன்: எனக்கு வஹீ (மூலம்) அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை. மேலும் நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்பவனேயல்லாமல் (வேறு ஒருவனாக) இல்லை என்று (நபியே) நீர் கூறுவீராக!' எனத் திருமறை வசனம் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.

நல்லதும் தீயதும் இறை நாட்டமே!

நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வினால் அறிவித்துக் கொடுக்கப்படாத நிலையிலுங்கூட தாமாகவே வருங்காலத்தைப் பற்றி அறியக்கூடிய முன்னுணர் ஞானம் உண்டு என்பாரும் உளர். இத்தகையவர்கள் சந்தேகத்துக்கிடமின்றி உணர்ந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் மற்றொரு திருவசனமும் அமைந்துள்ளது:

(நபியே!) நீர் கூறும்: 'அல்;லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தி இல்லாதவன்: மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன், (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை. (அத்தியாயம் 7 ஸூரத்துல் அஃராப் - 188வது வசனம்)

நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள்கூட நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வில் எந்த அளவுக்கு அவர்கள் சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment