கூடாத குறியும் மார்க்க நெறியும்..! (பாகம்- 2)


கூடாத குறியும் மார்க்க நெறியும்..!
(பாகம்- 2)
(கட்டுரை: மர்ஹும். அ. ஜமாலுத்தீன் எம். ஏ. எம்.ஃபில்.)
பேராசிரியர், வக்ஃப் வாரியக் கல்லூரி, மதுரை)


நாளும் கோளும் நம்மவர்க்கில்லை

நாளும், கோளும் நட்சத்திரங்களின் நிலை மாற்றமும் ஒருவனுடைய வருங்காலத்தை நிர்ணயிக்கின்றன என நம்புபவர்களை நாம் பார்க்கின்றோம்.

'அவனுக்குக் கிரகம் சரியில்லை. இது செவ்வாய்க்கிரகம். அது ஏழரை நாட்டுச் சனி..' என்றெல்லாம் பிதற்றித் திரியும் முஸ்லிம்களும்(?) இருக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்களுடைய அருமைக் குழந்தை இப்ராஹிம்(ரலி) மரணமடைந்தபோது மக்காவில் சூரியகிரகணம் சம்பவித்தது. பகல் இரவாக இருண்டு விட்டது. நபி(ஸல்) அவர்கள் மகனை இழந்து வருந்துகின்றமையால் அல்லாஹ்வின் துக்கத்தை இச்சம்பவம் காண்பிக்கிறது என்பதாக ஒரு சில நபித்தோழர்கள் கூறினர். இந்தத் துன்பம் மேலிட்ட நிலையிலும் கூட நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரஹணத்திற்குப் பொய்யாகவும், கற்பனையாகவும் காரணம் கற்பித்தத் தம்முடைய தோழர்களை வன்மையாகக் கண்டித்தார்கள். கோள்கள், கிரகங்களின் சஞ்சரிப்புக்கும், தனிமனிதருடைய இன்ப, துன்பத்திற்கும் தொடர்பில்லை என்பதை அந்தத் துன்ப உணர்வு சூழ்ந்த நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் அறிவு ரீதியாக நமக்குத் தெளிவாக்கி விட்டுச் சென்றுள்ளார்கள். (ஹதீஸின் கருத்து: ஹதீஸ் நூல்: புகாரீ).
குறிகாரனும் பைத்தியக்காரனும்

தான் எதைப்பற்றி அறிந்திருக்கவில்லையோ அதைப்பற்றியெல்லாம் தனக்குத் தெரிந்தது போல உளறுவது பைத்தியக்காரனுடைய இயல்பாகும். இவனோ புத்தி, பேதலித்த நிலையில் தன் வயமிழந்து இப்படிப் புலம்புகின்றான். இவ்வாறன்றி, தன்வயமழிக்காத நிலையில் சுயநினைவுடனேயே, தான், அறியாத வருங்காலத்தைப் பற்றிய ஞானமெல்லாம் தனக்கிருப்பதாகக் கூறிக்கொள்கிறான் குறிகாரன்.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதுரைகளை எடுத்தியம்பும்போது, அவர்களைப் பார்த்து, பைத்தியம் என்றும், குறிகாரர் என்றும் இழித்துரைத்தனர் காபிர்கள். அதை மறுத்துரைப்பதாகப் பின் வரும் வசனம் இறங்கியது.

'எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்! பைத்தியக்காரரும் அல்லர்.' (அத்தியாயம் 52 ஸூரத்துத்தூர் 29வது வசனம்).

-: குறிகாரர்கள் குதறப்படுவர் :-

நபி(ஸல்) அவர்கள் வாயிலாக அல்லாஹ் அறிவித்திடும் வார்த்தைகள் ஒரு குறிகாரனுடைய வார்த்தைகள் அல்ல. குறிகாரனோ, மனம் போன போக்கில் வருங்காலத்தைப் பற்றிக் கற்பனை செய்து பொய்யானவற்றை உளறக்கூடியவனாக இருக்கின்றான். இக்குறிகாரனைப்போல நபி(ஸல்) அவர்கள் மறை ஞானத்தின் மீது கற்பனை செய்து பொய்யுரைப்பாரானால், அவர் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் தண்டிக்கப்பட்டு விடுவார் என்பதாக இறைவன் பலமாக எச்சரிக்கிறான்.

'(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று. (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள். அகிலத்தாருக்கெல்லாம் இவைறனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு, பின்னர் அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.' (அத்தியாயம் 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா - 42முதல் 49வரையிலான வசனங்கள்).

இவ்சனங்கள் மூலம் குறிகாரர்களுடைய சொல்லுக்கு எத்தகைய கடுந்தண்டனை காத்திருக்கிறது என்பதை, நபி(ஸல்) அவர்களுக்குக் கூறுவது போல நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றான். இறைவன், இதிலிருந்து எவர் நல்லுபதேசம் பெறுகின்றாரோ, அவர் குறிகாரனிடம் செல்லுவதை விட்டும், ஜாதகம் பார்த்தல், ஜோதிடம் கேட்டல், சகுனம் - முகூர்த்தம் கணித்தல் முதலியவற்றை விட்டும் தம்மைத் தற்காத்துக் கொள்ளக் கடமை பட்டுள்ளார்.

-: பொய்யாக்கித் திரிபவர்கள் :-

ஈமான் கொண்ட முஸ்லிம்கள் எனக் கூறிக்கொண்டு இந்த இறைவசனங்களை எல்லாம் பொய்யாக்கித் திரிபவர்களும் இருப்பார்கள் என்பதை இறைவனே சுட்டிக் காட்டியுள்ளான். இந்த நிலைமையை இன்றும் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். குழந்தை பிறந்தவுடனேயே ஜாதகம் கணிப்பதற்கு - குறிப்பு எழுதுவதற்கு - படிப்பதற்கு - வேலை தேடுவதற்கு - வெளிநாடு செல்வதற்கு - மாடு வாங்குவதற்கு - சொத்து முடிப்பதற்கு - திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு - பிள்ளை பிறப்பதற்கு - எவ்வளவு காலம் வாழ்வான் எனத் தெரிவதற்கு - அமாவாசை - பௌர்ணமி - ராகுகாலம் - எமகண்டம் பார்த்து நல்ல நாளும் நேரமும் குறித்து மங்கள காரியம் செய்வதற்கு.. இப்படியாக எடுத்ததற்கெல்லாம் ஜோதிடனையும் குறிகாரனையும் தேடி ஓடும் அபலை முஸ்லிம்கள் ஏராளம்.. ஏராளம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment