சூராஹ் பகரா - கேள்வி பதில்


சூராஹ் பகரா - கேள்வி பதில் 
நன்றி: சகோதரி அனிசா அலி 

1.முத்தகீன்களுடைய (பயபக்தி உடையவர்கள்) எத்தனை குணங்கள் ஸூரா அல் பகராவில் கூறப்பட்டுள்ளன ?முத்தகீன்களுடைய ஐந்து குணங்கள் கூறப்பட்டுள்ளன.

மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். 

2 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் தாகூத்தை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் ,இந்த ஆயத்தில் கூறப்படும் தாகூத் என்பது என்ன

தாகூத் என்பது அல்லாஹ்வை தவிர வணங்கப்படும் எல்லா பொய் தெய்வங்களையும் குறிக்கும்.உதாரணம்—சைத்தான்கள், உருவச்சிலைகள்,மனிதர்கள், சூரியன்

3.அல்லாஹ் இந்த ஸூராவில் ஒரு உதாரணத்தை குறிப்பிடும் போது’.இதன் மூலம் பலரை வழிகேட்டில் விட்டுவிடுகிறான் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழியில் நடத்துகிறான்’ என்று குறிப்பிடுகிறான். அது என்ன?

வசனம் 26 இல் கொசுவை குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகிறான்

4 இப்லீஸ் காபிர் ஆனதற்கு காரணமாக இருந்த இரண்டு குணங்கள் என்ன?1.. இறைவனுக்கு கீழ் படிய மறுத்தான்2.பெருமை கொண்டான்.

2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

5. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். இதன் அடுத்த வசனத்தில் ஹாஸியீன்களுடைய அதாவது உள்ளச்சம் உடையவர்களுடைய இரண்டு குணங்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவை என்ன?

2:46. (உள்ளச்சமுடைய) அவர்களோ, “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்;என்றும் நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்றும் உறுதியாக நம்புவார்கள்

6.பனீ இஸ்ராயீல்களின் வரம்பு மீறுதல்களில் மிக மிக கொடியது எது? அதற்கு அல்லாஹ் அளித்த தண்டனையும் பின்பு அதிலிருந்து அவன் அளித்த மீட்சி என்ன

வசனம் 55, 56அல்லாஹ்வை கண்ணால் காணும் வரை நம்பிக்கை கொள்ள மாட்டோம் என கூறியதுதான். வரம்பு மீறுதல்களில் மிக மிக கொடியது அப்போது நபி மூஸா(அலை) அவர்களை தவிர உடன் இருந்தவர்கள் 70 பேர் இறந்தனர். பின்னர் அல்லாஹ் அவர்களை உயிர்ப்பித்தான்.

7. பனீ இஸ்ராயீல்களிடம் அல்லாஹ் ஒரு மாட்டை பலியிட கட்டளையிட்ட போது அவர்கள் அந்த மாட்டினுடைய தோற்றங்கள் குறித்து மீண்டும் மீண்டும் கேட்டனர். இதற்கு காரணம் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

வசனம் 71 “அவர்கள் அறுக்க மனமின்றி அதை அறுத்தனர்.”

இறைவன் கட்டளைக்கு உடனடியாக அடிபணிவதே அடியானின் கடமை.அதற்கு மனமின்றி அவசியமற்ற கேள்விகள் கேட்டு காலத்தை போக்கினர்

8. இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். அல்லாஹ் பனீ இஸ்ராயீல்களை குறித்து இவ்வாறு குறிப்பிட காரணமான குணம் என்ன?

தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர் தமது யூத இனத்தில் தோன்றாமல் அரபிகளிடையே தோன்றியதால் அரபிகள் மேல் கொண்ட பொறாமை.

2:90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் ((இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு


‎9.காளைக் கன்றின் வழிபாடு பனீ இஸ்ராயீல்களின் உள்ளத்தில் ஊன்ற காரணம் எது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் ?இறை நிராகரிப்பு2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.

10. நபி இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி என்ன?நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் சந்ததிகளில் இருந்து நபிமார்களை அனுப்புவோம் என்ற வாக்குறுதி2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.

11. நபி யாகூப் (அலை) அவர்கள் தனது மரண நேரத்தில் தனது பிள்ளைகளிடம் கூறியது என்ன?2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.

12. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.இந்த ஆயத்தில் . நபி இப்ராஹிம் (அலை அவர்கள் கூறும் வாக்கியத்தின் அரபி வார்த்தைகள் என்ன?الْعَالَمِينَ لِرَبِّ أَسْلَمْتُ அஸ்லம்த்து லி ரப்பில் ஆலமீன்இந்த கேள்விக்கு யாரும் பதில் கூறவில்லை..இது ஒரு சிறிய வாக்கியம் ஆனால் அதன் பொருள் மிகவும் ஆழமானது. இத்தகைய சிறிய வாக்கியங்களை மனப்பாடம் செய்தால் அடிக்கடி ஓதிக் கொள்ளலாம். அரபி வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்ளலாம்

13. “(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஸிப்காஹ்) ஆகும்; வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்” (எனக் கூறுவீர்களாக)இந்த ஆயத்தில் கூறப்பட்டுள்ள ஸிப்காஹ் என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் என்ன?ஸிப்காஹ் என்ற வார்த்தையின் இன்னொரு பொருள் மதம் அல்லது மார்க்கம்

14.143 ஆவது ஆயத்தில் அல்லாஹ் நம்மை (உம்மத்தன் வஸத் ) நடுநிலைச் சமுதாயம் என குறிப்பிடுகிறான். அதன் பொருள் என்ன?இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், '(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?' என்று இறைவன் கேட்பான். அவர்கள், 'ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)' என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், 'உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், 'முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், 'நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்' என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே 'இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக' எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது. 'நடுநிலையான' (வசத்) என்பதற்கு 'நீதியான' என்று பொருள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புஹாரி 6/4487

15.யூதர்கள், கிறித்தவர்கள் நமது நபி அவர்களை எந்த அளவு தெளிவாக தெரிந்து கொள்வார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் அதன் காரணம் என்ன

தங்கள் பிள்ளைகளை அறிவது போன்று அறிந்து கொள்வார்கள். அதன் காரணம் அவர்களின் வேதத்தில் நமது நபி அவர்களை பற்றி முன்னறிவிப்பு செய்யப் பட்டிருப்பதாகும்.

அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!" என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!" (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல்விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!" என பதிலளித்தார்கள். 

ஸஹீஹ் புஹாரி 3/2125

16.164 ஆவது ஆயத்தில் அல்லாஹ் விளங்கிக் கொள்ளும் சமூகத்துக்கு ஏழு அத்தாட்சிகளை குறிப்பிடுகிறான் அதில் குறைந்தது நான்கை குறிப்பிடவும்.

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.17. அல் பிர் என்பது என்ன அதன் தகுதிகள் என்ன (க்ளு- உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வது மட்டும் நன்மையாகாது.)உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்புவது மட்டும் நன்மை ஆகாது; அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). 2:177.

18. பயபக்தியுடையவர்கள் மீது மரணம் நெருங்கும் முன் விதியாக்கப் பட்ட கடமை என்ன

2:180. உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.

19.அரபாவிலிருந்து திரும்பி வரும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லாஹ் தன்னை நினைவு கூரும் படி அறிவுறுத்துகிறான், அந்த இடத்தின் பெயர் என்ன

மஸ்அருல் ஹராம்20. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான் இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் ஸஹாபியின் பெயர் என்ன

இந்த வசனம் ரோம் நாட்டை சேர்ந்த நபித்தோழர் ஸுஹைப் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப் பெற்றதாகும்.அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை தழுவி மதீனாவுக்கு ஹிஜ்ரா செல்ல எண்ணிய போது அவரது செல்வத்தை உடன் எடுது செல்ல குறைசியர் அனுமதிக்கவில்லை.அவர் செல்வத்தை துறந்து விட்டு செல்வதாக இருந்தால் செல்லட்டும் என கூறினர்.அதனால் தமது செல்வம் முழுதும் அவர்களிடம் கொடுத்து விட்டு ஹிஜ்ரா செய்தனர். அவர்கள் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்

ஆதாரம்- தப்ஸீர் இப்னு கஸீர்

21. அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்;

இந்த வசனத்தில் இருந்து நாம் பெறும் பாடம் என்ன

ஈமான் கொண்டவர்களுக்கு அவர்கள் நபிமார்கள் ஆனாலும் பெரும் சோதனைகள் துன்பங்கள் ஏற்படும்.ஆனால் பொறுமை உடையவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

22. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுவது என்பதன் பொருள் என்ன

இறைவனுக்கு முழுமையாக கீழ் படிந்து இஸ்லாத்தின் எல்லா சட்டதிட்டங்களையும் நிறைவேற்றுதல்

23.பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது செல்வத்தை செலவு செய்யும் மனிதனுக்கு அல்லாஹ் எதனை உதாரணம் கூறுகிறான்

2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

24. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

இந்த வசனத்தில் நடுத்தொழுகை என குறிப்பிடப்படும் தொழுகை எது

அஸர் தொழுகை

25.281 ஆவது வசனத்தின் சிறப்பு என்ன

இந்த வசனம்தான் குரானில் இறுதியாக அருளப் பெற்ற வசனமாகும். இந்த வசனம் அருளப் பெற்ற பின் நபி (ஸல்) ஒன்பது நாட்கள் உயிர் வாழ்ந்தார்கள்

ஆதாரம்- தப்ஸீர் இப்னு கஸீர்

1 comment:

  1. Please send surah an nisha qution and answers in tamil

    ReplyDelete