கூடாத குறியும் மார்க்க நெறியும்..! (இறுதிப் பாகம்)

கூடாத குறியும் மார்க்க நெறியும்..!
(இறுதிப் பாகம்)
(கட்டுரை: மர்ஹும். அ. ஜமாலுத்தீன் எம். ஏ. எம்.ஃபில்.)
பேராசிரியர், வக்ஃப் வாரியக் கல்லூரி, மதுரை) 



-: தனக்கு வரும் தீங்கையேத் தடுக்க முடியாதவன் குறிகாரன் :-

தென்னை மரத்தடியிலிருந்து கொண்டு எதிரிலிருப்பவனுடைய வருங்காலத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தானாம் ஒரு குறிகாரன். அம்மரத்திலிருந்து தேங்காய் ஒன்று அந்தக் குறிகாரனுடைய தலையிலேயே விழுந்து அவன் அந்த இடத்திலேயே செத்து மடிந்தானாம். இப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.

ஆக, தமக்கே நன்மையோ தீமையையோ தாமாக செய்து கொள்வதற்கு ஆற்றலற்ற இம்மனிதர்கள், பிறருக்கு நிகழவிருக்கின்றவைகளைத் துல்லியமாக எடுத்துரைக்கிறார்களாம். இவர்கள் பின்னாலே பகுத்தறிவு மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களும் செல்வது வேடிக்கையாகும்.

விலைக்கு வாங்கும் நிம்மதி குறைவு

ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ளுவது அறிவு ரீதியாக நினைத்துப் பார்த்தால் கூட எவ்வளவு பேதமையானதாக இருக்கிறது? இத்தகைய குறிபார்த்தல், ஜாதகம் கணித்தல் முதலிய ஷைத்தானியத்தன செயல்களினால் தனி மனிதனுடைய நிம்மதி குலைவதோடு, குடும்பத்தில் பிணக்குகள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் அன்றாடம் அறிகிறோம். 'இன்ன நட்சத்திரத்தில் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இது வாழ்ந்தால் இன்ன தீங்கு நேரும். எனவே யாருக்கும் தெரியாமல் கொன்று விடுங்கள்' எனக் கூறும் குறிகாரனுடைய சொல்லுக்குப் பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூடப் பலியாகிப் போகின்றனர். 'இன்னாருடைய ஜாதக பலன்தான் இத்தீமைகளுக்கெல்லாம் காரணம்' எனக் குறிகாரன் சொன்னதை நம்பி, அத்தகையவர்களை வேண்டா வெறுப்பாக, நாயினும் கீழாகக் குடும்பங்களிலும் பாவிக்கத் தொடங்குகின்றனர். ஜோதினடோடு, அரை நிர்வாண நிலையில் கன்னிப் பெண்ணைத் தனித்திருக்கச் செய்து, புதையல் எடுக்கிற ஆசையில் முழுக் குடும்பமுமே புதைந்து போன சம்பவங்களும் இச்சமுதாயத்தில் உண்டு.

ஹராம் ஹராம்தான்

மாற்று மதத்தவரிடம் சென்று ஜோதிடம் பார்ப்பதுதான் ஹராம். ஆலிம்சாக்களிடம் சென்று 'அரபு ஜோஸ்யம்' பார்ப்பது, 'அப்ஜது' கணக்குப்படி வருங்காலத்தைக் கவனித்துக் கொள்வதும் தவறல்ல எனக் கூறும் தறுதலைகளையும் மலிவாகக் காண்கிறோம். மெய்யான குர்ஆன் - ஹதீஸ் செய்திகளை அறியாத நிலையில் மெத்தப் படித்த போலி ஆலிம்ஷாக்களிடம் சிக்கிப் பொருளோடு, மன அமைதியும் இழந்து திரிதலையும் காண்கிறோம். அன்றைய அரபிகள் வருங்காலத்தைக் குறித்து செயல்படுவதற்காக அம்பு எறிந்து குறி பார்க்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். குறி பார்ப்பதைத் திருமறையின் பல இடங்களிலும் கண்டித்துள்ள இறைவன், இறுதியாக நபி (ஸல்) அவர்களுக்கு வெளிப்படுத்திய திருவசனத்திலும் இச்செயலை ஹராம் என முத்திரை குத்திக் குறிப்பிட்டுள்ளான்.

'..அம்புகள் மூலம் நீங்கள் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் உங்கள் மீது விலக்கப்பட்டிருக்கின்றது.' (அத்தியாயம் 5 ஸூரத்துல் மாயிதா 3வது வசனத்தின் ஒரு பகுதி).

இணை வைத்திடும் நிராகரிப்பாளர்கள்

குறிபார்த்தல் - ஜோதிடம் கேட்டல் முதலிய செயல்கள் இணை வைத்திடும் மாபாதகத்தைச் சார்;ந்ததாகும். இத்தகையவர்களுடைய தொழுகை போன்ற நல்லமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா: இவர்கள் நிராகரித்தவர்களே யாவர், என நபி(ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.

'குறி பார்த்தல், வரை கோடுகள் மூலம் ஜாதகம் கணித்தல், பறவைகள் மூலம் குறிபார்த்தல், முதலானவை இணைவைத்தலாகும். (அறிவிப்பவர்: கபீஸா (ரலி), ஆதார நூல்: அபூதாவூது).

'எவரொருவர் ஜோதிடனை அணுகி, ஜோஸியம் கேட்டு (ஜோஸியன்) கூறியதை உண்மை எனக் கூறுவாரோ, அவருடைய நாற்பது (நாட்களின்) தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல் முஸ்லிம்).

'பறவை சகுனம் பார்ப்பவன், பார்க்கக் கோருபவன், குறிபார்ப்பவன், குறிபார்க்கப் கோருபவன், சூனியக்காரன், சூனியம் பார்க்கக் கோருபவன், ஜோதிடன் கூறியதை உண்மைப் படுத்துபவன் ஆகியவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் இறக்கி வைத்ததை நிராகரித்தவர்களாவார்கள்.' (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) தொகுத்தவர்: பஸ்ஸார் (ரஹ்).

-: இனிதே இயம்புக இன்ஷா அல்லாஹ்! :-

நாளை என்ன நடக்கும் என்பதை எந்த மனிதராலும் திட்டவட்டமாக எடுத்துக் கூற முடியாது. அதைப்பற்றிய பரிபூரண ஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். அல்லாஹ் எவ்வாறு நாடுகின்றானோ அவ்வாறு தான் வருங்கால நிகழ்ச்சிகள் அமைய முடியுமேயன்றி, அவை மனித நாட்டத்துக்கு கட்டுப்பட்டவையல்ல.

'நபியே! எந்த விஷயத்தைக் குறித்தும், நிச்சயமாக அதை நான் நாளை செய்வேன் என்று கூறாதீர்!' அல்லாஹ் நாடினாலன்றி அது நடைபெறுவதில்லை' (அத்தியாயம் 18 ஸூரத்துல் கஹ்ஃபு 23 மற்றும் 24 ஆம் வசனங்களின் கருத்து) என்னும் பொருள் கொண்ட வசனங்களையும் அல்லாஹ் நம் சிந்தனைக்கு வைத்திருக்கிறான்.

-: முக்காலமும் அறிந்தவன் :-

இது வரை சொல்லப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகப் பினவரும் இறைவசனம் அமைந்திருத்தலைக் காணலாம்.
'நிச்சயமாக அந்த (யுக முடிவு) காலத்தைப் பற்றிய ஞானம் அல்;லாஹ்;விடமே இருக்கிறது, அவனே மழையையும் இறக்குகிறான், இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை;: தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சய மாக அல்;லாஹ்; தான் நன்கறிபவன், நுட்பம் மிக்கவன். (அத்தியாயம் 31 ஸூரத்து லுஃமான் - 34வது வசனம்).

இதையறிந்து தெளிந்து, குறிகேட்டல் என்னும் இணைவைத்தலாகிய செயலிலிருந்தும் விடுபட்டு, அல்லாஹ்வுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் பொருத்தமான வாழ்க்கை வாழ்வதையே நமது குறியாக அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!.

No comments:

Post a Comment