இஸ்லாமும் - அறிவியலும் ஓர் கலந்துரையாடல்..! (பாகம் - 5)

இஸ்லாமும் - அறிவியலும் 
ஓர் கலந்துரையாடல்..! 
(பாகம் - 5)
Courtesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்



பாப்: நீங்கள் அருள்மறை குர்ஆனை நிரூபிப்பதற்கு, அறிவியல் அறிவை பயன்படுத்துகிறீர்களா?.

யூனுஸ்: இல்லை. அருள்மறை குர்ஆன் ஓர் அறிவியல் புத்தகம் அல்ல. மாறாக அருள்மறை குர்ஆன் எல்லா விஷயங்களையும் தெளிவாக அறிவிக்கும் ஓர் அற்புத வேதமாகும். அருள்மறை குர்ஆனில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் இருக்கின்றன. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியலைப் பற்றி அறிவிக்கின்றன. முற்றிலும் உண்மையாக இருக்கும் ஒன்றை, அறிவியிலைக் கொண்டு நிரூபிக்க நான் முயலவில்லை. ஆனால் கற்றறிந்த உங்களை போன்றவர்களுக்கு எதனையும் நிரூபிக்க ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது: முக்கியமாக யார் இறைவனை நம்பவில்லையோ அவர்களுக்கு அறிவியல் ஓர் அளவுகோலாக பயன்படுகிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அருள்மறை குர்ஆன்தான் அளவுகோல்.

அருள்மறை குர்ஆனுக்கு நல்லது மற்றும் கெட்டதை பிரித்தறிவிக்கக் கூடியது என்ற பொருளைத் தரக்கூடிய 'ஃபுர்கான்' என்று இன்னொரு பெயரும் உண்டு. எனவேதான் தாங்களுக்கு அருள்மறை குர்ஆனை விளங்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாங்களின் அளவுகோலான அறிவியலையே பயன்படுத்தினேன். தங்களது அளவுகோலான அறிவியல் சொல்வது எல்லாம் மிகச் சமீப கால கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளையும், உண்மைகளையும் பற்றித்தான். ஆனால் நாங்கள் பயன்படுத்தும் அளவுகோலான அருள்மறை குர்ஆன் இதைப்பற்றியெல்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னறிவிப்பு செய்துவிட்டது. இப்போதாவது அருள்மறை குர்ஆன் அறிவியலைவிட பன்மடங்கு சிறந்தது என்றும், அருள்மறை குர்ஆன்தான் எல்லாவற்றிர்க்கும் சரியான அளவுகோல் என்கிற முடிவுக்கும் வருவோமா?.

பாப்: மேலும் சொல்லுங்கள்..!

யூனுஸ்: அருள்மறை குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வதுவசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது:
..மேலும் (இறைவன்தான்) வானத்திலிருந்து நீரையும் இறக்கினான், இம் மழை நீரைக் கொண்டு நாம் பலவிதமான தாவர வர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப் படுத்துகிறோம்' (என்று இறைவன் கூறுகிறான்).

அறிவியல் அறிஞர்களால் மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தாவர உலகிலும் ஆண் - பெண் ஜோடிகள் இருக்கின்றன என்கிற உண்மையை அருள்மறை குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறை சாற்றி நிற்கிறது. இதே பொருளைத் தரக்கூடிய மற்றொரு வசனம் அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துல் ரஃதுவின் 3வது வசனமாக எதிரொலிக்கிறது:
'..இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்..''

யூனுஸ்: உயிரியலின் ஒரு பகுதி மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியிலும் சமூக அமைப்பு உள்ளது என்பதை மிகச் சமீபத்தில் கண்டறிந்து உள்ளது. இதே செய்தியை 14 நூற்றாண்டு முன்பே அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 6 ஸுரத்துல் அன்ஆம் - ன் 38வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது:

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை: (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை, இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்.

யூனுஸ்: எறும்புகள் ஒன்றோடொன்று பேசிக் கொள்கின்றன என்று அருள்மறை குர்ஆன் சொல்வதாக நான் உங்களிடம் சொன்னால் தாங்கள் நகைக்கக் கூடும். ஆனால் உயிரியலின் ஒருபகுதி மிருகத்திலோ அல்லது புழு, பூச்சிகளிலோ மனிதனின் செயல்பாடுகளைப் போன்று ஓரளவுக்கு செயலில் ஒத்திருக்கக் கூடியது எறும்புதான் என்பதை மிகச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. அருள்மறை குர்ஆனின் 27வது அத்தியாயம் ஸுரத்துல் நம்ல் - ன் 18வது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று எறும்புகள் மனிதர்களை போன்று பேசும் திறன் கொண்டவை என்பது மட்டுமின்றி, எறும்புகள் இறந்துவிட்ட எறும்புகளை புதைப்பதிலும், ஒரு சந்தை அளவுக்கு பொருட்கள் இருந்தாலும் அவை அத்தனையையும் (மனிதர்களைப் போன்று)உண்ணக் கூடிய திறனும் உள்ளவை என்பதையும் நாம் கண்கூடாகக் காணலாம்.

பாப்: உங்களது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவேளை மிகச் சிறந்த ஒரு ஆராய்ச்சியாளராக இருந்து, இவைபற்றியெல்லாம் ஆய்வு செய்து குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா?.

யூனுஸ்: அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப கல்வி கூட கற்காத காரணத்தால் எழுதவோ, படிக்கவோ தெரியாத ஓர் 'உம்மி' நபியாவார்கள் என்கிற வரலாற்று உண்மையை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தவிர நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்திருந்த மற்ற தோழர்களிலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதவோ, படிக்கவோ அறியாதவர்களே.! அவ்வாறு எழுத படிக்கத் தெரியாதவர்களைக் கொண்டிருந்த சமூகத்தில் அருளப்பட்ட அருள்மறை மேலும் கூறுகிறது - தேனீக்களில் பெண் இனத்தைச் சார்ந்த தேனீக்கள்தான் தேனை சேகரிக்கின்றன என்று. எத்தனைதான் ஆய்வு செய்பவாராக இருந்தாலும் இதுபோன்ற துல்லியமாக செய்திகளை ஆய்வு செய்திருக்க இயலுமா?. தாங்கள் இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளை எனக்கு நினைவூட்டியிருக்கிறீர்கள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயம் ஸுரத்துன் நஹ்லின் 69வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'அதன் (தேனீக்களின்) வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு: நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.'
தேனில் மருத்துவ குணங்கள் உள்ளது என்றும் அதனை அலர்ஜி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம் என்றும் இன்றைக்கு மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பாப்: தாங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் ரஷ்ய ராணுவ வீரர்கள் உடற்காயங்களை ஆற்றுவதற்கு தேனை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். காயம் விரைவாக ஆறிவிடுவதுடன், மிகக் குறைந்த அளவில்தான் காயத்தின் தழும்பும் உண்டாகிறது என்பது ரஷ்ய ராணுவ வீரர்கள் அனுபவபூர்வமாக கண்டறிந்த உண்மை.

யூனுஸ்: சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரபலமான டாக்டர் வில்லியம் ஹார்வி இந்த உலகத்திற்கு தெரிவித்த இரத்த அழுத்தம் பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் 16 வது அத்தியாயம் ஸுரத்துந் நஹ்லின் 66வது வசனம் இரத்த அழுத்தம் பற்றியும் அதனால் பசுவின் இரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் இருந்து கிடைக்கும் நாம் சுவையாக அருந்தக் கூடிய பாலைப் பற்றி கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது:

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்)புகட்டுகிறோம்.

பாப்: நன்று..! மனித இனத்தைப் பற்றி அருள்மறை குர்ஆன் என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள்.

(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)

No comments:

Post a Comment