>பெண்களுக்குரிய உரிமைகளைப் பற்றி குர்ஆன் நபி வழி

பெண்களுக்குரிய உரிமைகளைப் பற்றி குர்ஆன் நபி வழி.



பெண்களுக்குரிய உரிமைகளைப் பற்றி குர்ஆன் நபி வழி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அநாதைகள், பெண்கள் ஆகிய பலவீனமான இருவரின் உரிமைகளைப் பறிப்பதைக் கடுமையான குற்றம் என நான் கருதுகிறேன்". (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ)

'கணவர்களுக்கு பெண்களிடத்திலிருக்கும் உரிமையைப் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமை உண்டு". (அல்குர்ஆன் 2:228)

கல்வி கற்க உரிமை:

"கல்வியைத் தேடுவது ஆண் பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா)

திருமண உரிமை:

(திருமணத்திற்கு) கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம், அஹமத்)

ஹன்ஸா பின்த் ஹித்தாம் ரளியல்லாஹு அன்ஹாஎன்ற பெண்மணியை அவரது தந்தை சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத அப் பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இதைக் கூறியபோது அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
(நூல்: புகாரி, அபுதாவுத், அஹமத்)

""இறை நம்பிக்கை கொண்டவர்களே, பெண்களை(அவர்கள்) மனப்பொருத்தம் இல்லாத நிலையில் நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்களுக்கு கூடாது". (அல் குர்ஆன் 4:19)

சொத்துரிமை:

இஸ்லாம் பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுத்து உள்ளது. அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாததும் வரதட்சணைக்கு ஒரு காரணமாகிவிட்டது சொத்துரிமை என்பது ஒருவரின் இறப்புக்குபின் இஸ்லாம் கூறுகின்ற முறைப்படி பங்கிட்டு கொடுப்பதோ அல்லாமல் வரதட்சணை என்பதை கொடுப்பதினால் சொத்துரிமையாகாது.

அதுபோல் வரதட்சணை என்பது மாப்பிள்ளையின் அந்தஸ்த்துக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுவதால் இதுவும் சொத்துரிமையாகாது. இஸ்லாம் கூறுகின்ற சொத்துரிமை என்பது பெண் மக்கள் அனைவருக்கும் சரியான முறையில் பாரபட்சம் காட்டாமல் கொடுப்பதேயாகும்.

மஹர்:

"மணமுடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின்சுருக்கம்) அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு,
ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனக்கு ஏதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னன்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்" என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் (ரலி),
ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம் அபுதாவுத் நஸயீ, தாரமி, திர்மிதி

அந்த வகையில் திருமணத்தின் போது இஸ்லாம் ஆண்களுக்கு மஹர் என்னும் பெண்ணுக்குரியபாதுகாப்பு நிதியை பெண்களுக்கு மகிழ்வுடன் கொடுக்கக் கூறுகிறது.

மஹர் எவ்வளவு என்பதை நிர்ணயிக்கும் உரிமை மணமகளுக்கே இஸ்லாம் கொடுத்துள்ளது. இந்த உரிமையை இஸ்லாம் வழங்க காரணம் திருமண வாழ்க்கையில் அதிக இழப்பும், தியாகமும் பெண்ணுக்கே. மேலும் ஒருவேளை அந்த கணவன் பெண்ணை விட்டு விவாகரத்து பெற்று சென்று விட்டாலும் அப்பொழுது அந்த பெண்ணுக்கு மிக உதவியாக அந்த மஹர் (மண கொடை என்னும் பாதுகாப்பு நிதி) இருக்கும்.

இதில் வேதனை என்னவென்றால் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள மஹர் என்ற மண கொடையைப் பற்றிய அறிவு சிறுதும் இல்லை. பெண்களுக்கு மஹரை பற்றிய அறிவு இல்லாதததும், ஆண்கள் வரதட்சணையை வாங்க ஒரு காரணமாக இருக்கிறது என்று கூட கூறலாம்

No comments:

Post a Comment