இஸ்லாமிய பார்வையில் ஒரு பெண்ணை திருமணத்திற்கு ஒரு ஆண் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்



இஸ்லாமிய பார்வையில் ஒரு பெண்ணை திருமணத்திற்கு ஒரு ஆண் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்.











பெண்களை அவர்களின் அழகிற்காக மணமுடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம். அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவறச் செய்து விடலாம். அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மண முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப் பெண் (தீய) அழகிய பெண்ணைவிட மேலானவள்.

(அறிவிப்பவர்: அப்துல்லா பின் உமர் , நூல்: புகாரிஃ முஸ்லிம், அஹமத்)

மேலே கூறப்பட்ட நபிமொழிப்படி மணப்பெண் இறைவனுக்கு இணைவைக்காதவளாகவும் இறைவணக்கமும் நபி வழிப்படி நல்லொழுக்கமுள்ளவளாக இருப்பவளையே ஒரு மணமகன் மணமகளாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கிறது என்றால் நற்குணத்தைவிடவும் பணத்திற்கு மதிப்பளிக்கப்படுகிறது. எந்த வீட்டீல் அதிகம் வரதட்சணை தருவார்கள் அல்லது எந்த வீட்டீல் அதிகம் சொத்துள்ளது என்று மணமகனின் பெற்றோர்கள் அலைவதைப் பார்க்க முடிகிறது.

அவர்களில் தான் எத்தனை வகை. ஒரு வகையினர், வரதட்சணையைகறாராக பேரம் பேசியும் சொத்தின் மதிப்பை வைத்து கணக்கு போட்டு முடிந்த அளவு கறந்து விடுவார்கள். மற்றொரு வகையினர் வரதட்சணை எதிர்ப்புக்கருத்துக்களை பேசியும், எதிர்த்தும் வந்தவர்கள், இவர்களால் நேரடியாக வரதட்சணையை கேட்டுப் பெற முடியாது. இவர்களில் இரு பிரிவினர் உள்ளனர். முதல் பிரிவினர் எங்களுக்கு வரதட்சணையாக ஒன்றும் வேண்டாம் உங்கள் மகளுக்குக் கொடுப்பதை கொடுங்கள் என்று கூறி மறைமுக நிர்பந்தமாக வரதட்சணை வாங்கிவிட்டு வரதட்சணை வாங்கவில்லை என்று சமூகத்தில் கூறிவரும் ஒரு கூட்டம். இரண்டாம் பிரிவினரோ, ரோக்க பணமாக வாங்கினால் வரதட்சணை என்று கூறிவிடுவார்களே என்று நினைத்து குறிப்பிட்ட பணத்திற்கு பதில் நகையாக பெற்றுக் கொள்வார்கள். இவர்கள் உண்மையில் கொள்கை வாதிகளா?

வரதட்சணையை ஒழிக்க வேண்டுமென்று சிறிதளவேனும் மனதில் எண்ணம் உள்ளவர்கள் என்றால் இறைவனும் அவனது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மார்க்க அடிப்படையில் நல்லொழுக்கத்துடன் வாழும் பெண்கள் இருப்பார்களே! அவர்களை மணம் முடித்துக் கொள்ளலாமல்லவா?

அதையெல்லாம் போலி குடும்ப கௌரவம் பேசி பணத்தையே முழு குறிக்கோளாக கொண்டு தவிர்த்து விடுவார்கள். அதுபோல் வரதட்சணை கொடுக்கமாட்டோம் என்று இறைவனுக்கு அஞ்சி சபதம் எடுத்திருக்கும் கன்னிப் பெண்கள் எத்தனை? எத்தனை? அது வெல்லாம் இவர்களுக்கு கண்ணில் படாது. ஏனெனில் இவர்களின் உள்நோக்கம் வரதட்சணையல்லவா?

பெண் பார்ப்பதற்கு முன் அவர்களின் சொத்து விபரம், எவ்வளவு கொடுக்க வசதி உள்ளது என்பதை அறிந்து விட்டுத்தான் பெண் பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகும். பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயமே. உண்பதற்கும், ஆடம்பரம் செய்வதற்கும், பேரம் பேசுவதற்கும் தான் அது. பெண்ணைப் பார்த்தபிறகு பெண் வீட்டாரிடம் எவ்வளவு ரொக்கமாக தருவீர்கள் நகையாக எவ்வளவு, இன்னபிற பொருட்கள் எவ்வளவு என்று பெரியோர்கள் என்று கூறிக்கொள்ளும் சில மனித மிருகங்கள் சமூகத்தில் அலைவதைப் பார்க்க முடிகிறது. இந்த வரதட்சணையை வாங்குவதற்கு ஒரு நாள் குறித்து அதற்கு நிச்சயதார்த்தம் என்று பெயரும் வைத்து அன்றைய தினத்தில் திருமணத்திற்கு ஆகும் செலவில் பாதி செலவை செய்ய வைத்து அதன் மூலம் ஏப்பம் விடுகிறது சிலக் கூட்டம். ஏன் இந்த ஆடம்பரங்கள்?
"உண்ணுங்கள், பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண்விரயம் (செலவு) செய்பவர்களை நேசிப்பதில்லை". (அல் குர்ஆன் 7:31).

வரதட்சணை என்ற ஒரு தீமை எல்லா தீமைக்கும் துணை போகிறது. நாங்கள் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை. திருமணச் செலவிற்கு பணம் வாங்குகிறோம் அதில் மண மகளிற்கு நகை போடுகிறோம், வருகிறவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம். பூ மாலை, கார் வாடகை ஏனைய செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதால் பெண் வீட்டாரிடம் பணம் வாங்குகிறோம் என்று கூறும் ஆண்மை உள்ள இளைஞனே?

அவனை பெற்றவர்களே! பெண் வீட்டாரிடமிருந்து பணம் வாங்கித்தான் இந்த வீண் செலவுகளை செய்ய வேண்டுமா? நீங்கள் வரதட்சணையை பணமாக, நகையாக, பொருளாக, சொத்தாக வாங்குவதற்கு வெட்கமில்லையா?

வலிமையுள்ள இளைஞனே உன்னைவிட உடலாலும் வலிமையாலும் எல்லா வகையிலும் மென்மையான, தன்னுடைய மனைவி என்கிற அந்தஸ்தை கொடுப்பதற்கு, உன்னுடைய வலிமையையும், ஆண்மை என்ற தன்மையையும் வெட்க வைத்து விலை பேசி வாங்குவது நியாயமா? உன் மனதில் குற்ற உணர்வு சிறிதும் கிடையாதா? நீ இறைவனின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமா? சிந்தித்துப்பார்.

இலட்சியமுள்ள இளைஞனெ! உன் இலட்சியங்களை சில லட்சங்கள் வாங்கி எச்சங்கள் போட்டு, ஏன்? அதைவிட கோடிகள் வாங்கி பேடி ஆகப் போகிறாயா?

வரதட்சணை என்ற கொடுமையால் திருமணமாகாமல் திருமண கனவோடு ஏங்கி பரிதவிக்கும் கன்னிப் பெண்கள் உன் அண்டை வீட்டீலும், உன் உறவுக்கார வீட்டீலும் ஏன் உன் வீட்டீலும் இருப்பதை பார்த்ததில்லையா? அல்லது உனக்கு கண் இல்லையா? அந்தக் கன்னிப் பெண்களின் திருமண வாழ்க்கை உன் கையில் இருக்கிறது.

நீ நினைத்தால் அவர்களுக்கு திருமண வாழ்வு கொடுக்கலாம். பெண்ணை பெற்றோர் சமூகத்தில் சுயமரியாதையோடு நடக்க செய்ய போகிறாயா? அல்லது முதிர்கன்னிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய போகிறாயா? சிந்தித்துப்பார்.

உன் தாய், தந்தை ஆடு, மாடுகளுக்கு விலை பேசுவதைப் போல் உனக்கு விலை பேசுகிறதை நீ அறியவில்லையா? உன்னோடு வாழப்போகும் உன் துணைவி, ஊரை விட்டு, பெற்றோரை விட்டு உறவினர்களை விட்டு செய்யும் தியாகங்கள் எத்தனை? எத்தனை? உனது வாரிசை சுமக்க அவள் படும் சிரமங்கள் எத்தனை? எத்தனை? உனக்கு பணி விடை செய்துதரும் வேலைக்காரியாய் இருக்கிறாள்.

வீட்டு வேலைச் செய்யும் வேலைக்காரிக்கு மாதச் சம்பளம் எவ்வளவு கொடுப்பாய்?

உன்னோடு காலமெல்லாம் வாழப்போகும் உன் துணைவி உனக்கும் உன் பெற்றோருக்கும் வீட்டு வேலை செய்தும், உனக்கு தாம்பத்திய இன்பமும் தருகிறாளே அவளுக்கு நீயல்லவா கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய தியாகங்கள் செய்யக் கூடிய பெண்களிடம் கையேந்தி வரதட்சணை என்ற பிச்சைக் கேட்பது நியாயமா?

வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணமே வேண்டாம் என்ற முடிவில் முதிர் கன்னிகள் எத்தனை? எத்தனை? மானம், கௌரவம், குடும்பத்தாருக்கு சுமை கொடுக்க வேண்டாம் என இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள்தான் எத்தனை? எத்தனை? தன் வாழ்க்கையை தானே தேடிக் கொள்வதாக எண்ணி கற்பிழந்த பெண்கள் எத்தனை எத்தனை? அப்போதெல்லாம் வீர வசனம் பேசும் இளைஞனே அவள் ஓடியதற்கு காரணமென்ன?
வரதட்சணை வாங்கும் கொடுரக்காரர்தான் முன்னால் நின்றான்.

இதைவிடவும் கொடுமை என்னவென்றால் இரக்கமுள்ளவர்கள் என்று கூறும் பெண்களே இந்த வரதட்சணை வாங்குவதில் அதிகம் பங்கு கொள்கிறார்கள். தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தாய் தன் மகளை வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்க ஏதாவது மாப்பிள்ளை கிடைக்கமாட்டானா? தன்னிடம் வரதட்சணை கொடுப்பதற்கு ஏதும் இல்லையே.

தன் மகளுக்கு வயதாகிப் போகிறதே என்று ஏங்குகிற அதே தாய், தன் மகனுக்கு பெண் தேடும்போது வரதட்சணை சந்தையில் எங்கு அதிக விலைக் கிடைக்குமோ அங்கு தன் மகனை விலை பேசுகிறாள்.

மேலும் இத்தனை லட்சங்கள் வாங்கினேன், இத்தனை கோடிகள் வாங்கினேன் என்று பெருமையாக பேசுவதற்காக வரதட்சணை என்ற கொடுமையை பேரம் பேசி வருவதை பார்க்க முடிகிறது.

சமூகத்திற்காக வாரி வாழங்கும் வள்ளல் கூட இந்த வரதட்சனையில் அதிகம் கவனம் செலுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் சமூக அந்தஸ்திற்காக வரதட்சணை என்னும் சாக்கடையில் விழுந்துவிட்டு பிறகு வாரி வழங்கும் வள்ளலாக மாறி விடுவார்கள்.

தன் வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து வாழ்ந்து வரும் நல்ல மனிதர்கள் இவர்களின் மகள்கள் அல்லது சகோதரிகள் திருமணத்தின் போது வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொடுப்பதற்கு காரணமென்ன? இஸ்லாத்திற்கு எதிரான வரதட்சணையை ஒரு மண மகன் கேட்பதனால் தானே? அந்த நல்ல மனிதர்கள் தன் மகளை, சகோதரியை திருமணம் முடித்து வைக்க வரதட்சணை என்ற சாக்கடையில் தள்ளப்படுகிறார்கள். தள்ளியவர்கள் தான் மிகப் பெரும் முதல் குற்றவாளிகள்.

வரதட்சணையின் துவக்கம் பெண் பார்ப்பதிலிருந்து, நிச்சயதார்த்த விருந்திலிருந்து மாப்பிளைக்கு பெண் வீட்டார் கொடுக்கும் தங்க மோதிரம், தங்க சங்கிலி, வாட்சு, கார் பைக்; போன்றவைகளில் துவங்கி பேசப்பட்ட தொகை வரை கொடுக்க பட வேண்டும்.

பெண்ணிற்கு நகையும் வீட்டீற்கு தேவையான அனைத்து பொருள்களும் கொடுக்கப்பட வேண்டும். திருமண தினத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் அழைத்து வரும் ஆட்களுக்கு பிரியாணி கொடுக்க வேண்டும். அதை எவ்வித வெட்கமுமில்லாமல் தின்று வர ஒரு கூட்டம். தின்று விட்டு அதை குறை கூற ஒருக் கூட்டம். இஸ்லாமிய பார்வையில் பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிள்ளை தான் அழைத்து வரும் நபர்களுக்கு விருந்து கேட்பதும் வரதட்சணையாகும்.

(வலிமா விருந்து என்பது மாப்பிள்ளை வீட்டார்கள் கொடுக்கும் விருந்தாகும்)

திருமணம் முடிந்த பின் மறுவீடு என்று ஒரு சடங்கு, அதிலும் கௌரவத்திற்கு ஏற்றவாறு வீட்டீற்கு தேவையான அனைத்து பொருள்களும் மாப்பிள்ளை வீட்டீற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டால் எல்லாம் அன்பளிப்பு என்று கூறுவார்கள். உண்மையில் இவை அன்பளிப்புதானா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் கூறமுடியும்.

இவை அனைத்தும் மறைமுக கட்டாய வரதட்சணை என்பதை நாம் அறிவோம். இவை எப்படி சமூகத்தில் ஊடுருவியது என்றால் வசதி படைத்த வீணர்கள், தன் வசதியை மக்களுக்கு காட்ட அவர்களால் உருவாக்கி இன்று எல்லோராலும் கட்டயாமாக பின்பற்றப்படுகின்ற ஒரு நிகழ்வுதான், இந்த கேடுகெட்ட வைபவங்கள்.

சிறுதொழில் செய்பவர்க்கு ஏற்றவாறும், பெரும் முதலாளிக்கு ஏற்றவாறும், ரோட்டோர கூலி தொழிலாளிக்கு ஏற்றவாறும், பிச்சை எடுப்பவனுக்கு ஏற்றவாறும் இந்த வரதட்சணை இவர்களுக்குள் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரும் செய்யும் செயல் மனிதவிரோத செயலே.

அதுபோல் இன்று ஆண்டி முதல் அறிஞர் வரை வரதட்சணையில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு. அவரவர்கள் கற்ற கல்விக்கேற்றவாறு விலை பேசப்படுகிறது. படித்தவர்களுக்கு பெயருக்கு பின்னால் உள்ள டிகிரிக்கு ஏற்றவாறு வரதட்சணை பேசப்படுகிறது. கல்வி கற்பது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (நூல்: இப்னுமாஜா)

இன்று அந்த கல்வி எதற்காக கற்கப்படுகிறது என்றால் படிப்புக்கேற்றவாறு வரதட்சணை வாங்கலாம் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இருப்பதால்தான். கல்வி வரதட்சணைக்கு மூலதனமாக போடப்படுகிறது! தன்னை படித்த அறிவாளியாகவும், மேதையாகவும் எண்ணி திரியும் இந்த இளைஞன் வரதட்சணை வாங்குவதில் படிக்காத பாமரனை விடவும் கீழாக நடந்து கொள்வதை நாம் பார்க்க முடிகிறது.

கல்வியறிவும், பொருளாதாரமும் மேம்பட்டால் வரதட்சணை ஒழிந்து விடும் என்று சிலர் கூறிகின்றார்கள். உண்மையில் கல்வியறிவைக் கொண்டு டாக்டருக்கும், என்ஜினியருக்கும், ஒரு விலை பேசப்படுகிறது.

மற்ற கல்விகளுக்கு ஒரு விலை என்று கல்வியை காசாக்கும் கயவர்கள் கூட்டம் அதிகமதிகம். அதுபோல் வசதி படைத்தவர்கள் தான் இன்று வரதட்சணை என்ற இந்த ஈன செயலை அதிகமதிகம் செய்கிறார்கள்.

ஆதலால் பொருளாதார வசதியும் கல்வியறிவும் இருந்து விட்டால் வரதட்சணை ஒழிந்து விடாது என்பது நிதர்சன உண்மை. முஸ்லிம் பெண்களை படிக்க வைப்பது என்பது ஆண்களைவிட குறைவுதான்.

காரணம் ஒருவர் தன் மகளை சிரமப்பட்டு படிக்கவைத்தாலும், அவள் திருமணத்தின் போது அவள் படிப்புக்கேற்ற மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்.

படித்து வேலையிலுள்ள மாப்பிள்ளைக்கே இன்று அதிக விலை திருமண சந்தையிலுள்ளது. படிக்க வைக்காமலிருந்தால் தன் மகளை குறைந்த விலையுள்ள ஏதேனும் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்பதால் தான் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் கல்வியறிவு மிக மிக குறைவுயேன்றுக் கூட கூறலாம்.

இளைஞனே! உனக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் முடித்து தந்ததால் சொத்தை இழந்து, வியாபார கடைகளை இழந்து, மானம் இழந்து, சுயமரியாதை இழந்து, இஸ்லாத்தின் பெரும் பாவமாக கருதும் வட்டிக்கு பணம் வாங்கி உன் குழந்தைக்கு நகையும், பிரசவ செலவும், பெருநாள் படியும் தருகிறார்களே அவர்களை இந்த இக்கட்டான சூழலை உருவாக்கிய நீ மனித விரோதியல்லவா.

(உன்னால்) அநீதம் செய்யப்பட்டவனின் பிராத்தனையை பயந்துகொள். இறைவனுக்கும் இவனது பிராத்தனைக்குமிடையே திரையேதும் இல்லை என்பது நபிமொழி.

உன் வாழ்க்கைக்காலமெல்லாம் இணை துணையாக உன்னோடு வாழப்போகும் உன் வருங்கால மனைவி வீட்டாரிடமிருந்து அவர்களை கசக்கி பிழிந்து அவர்களைகடனாளியாகவும் பள்ளிகளில் பிச்சையெடுப்பவர்களாகவும் மானமரியாதை இழந்து உயிருள்ள நடை பிணமாக்கிய பிறகு உனக்கு என்ன மரியாதை இருக்கிறது.

இறைவனிடத்தில் மிகப்பெரும் கொடுமையை செய்த குற்றவாளியல்லவா நீ. இதையெல்லாம் அறிந்த பிறகு நீ கேட்டு வாங்கினாலும் அவர்கள் தந்தாலும் வரதட்சணை என்ற பிச்சையைத்தான் வாங்குகிறாய்!

நீங்கள் நீதி செலுத்துங்கள் இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது அல்லாஹ்வுக்கு அஞ்சி செயலாற்றுங்கள்.
நீங்கள் செய்பவனவற்றை அல்லாஹ் முழுமையாக அறிகிறான்.
(அல் குர்ஆன் 5:8)

No comments:

Post a Comment