சிலந்தி - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப் ( 2 )


சிலந்தி - ஆங்கிலத்தில் - ஹாரூன் யஹ்யா - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப்

முன்னுரை - 2

மனிதர்களும், அவர்கள் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய இப்பிரபஞ்சம் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு, படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டது. அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்: அந்த படைப்பாளன் ஒருவனையே வணங்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வுலகும் அதில் உள்ள உயிரினங்களும் படைக்கப்பட்டன. அத்தகைய குறைவில்லா படைப்பாளன் குறைகளுக்கும் பலகீனங்களுக்கும் அப்பாற்பட்டவன். அப்படைப்பாளன் எல்லையற்ற ஆற்றல் மிக்கவன். அவனே இறைவன். வல்லமையும், ஆற்றலும் மிக்க படைப்பாளன் அருள்மறை குர்ஆனிலே கூறுவதுபோன்று இவ்வுலகையும், இவ்வுலகில் வாழும் உயிரினங்களையும் படைத்ததன் குறிக்கோள், ஆற்றலும் வல்லமையும் மிக்கோனின் படைப்பாற்றலை அறிந்து, இவ்வுலகம் முழுவதற்கும் இறைவனான அவனுக்கே முற்றிலும் வழிபட வேண்டும் என்பதற்காகவே. இதுபற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகின்றான்:
'மேலும் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும்é சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்க வில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 44 ஸூரத்துத் துகான் - 38 மற்றும் 39ஆம் வசனங்கள்)

இவ்வுலகம் முழுவதற்கும் இறைவனான அவனுக்கே முற்றிலும் வழிபட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இவ்வுலகவாழ்வில் நாம் பெற்ற அனுபவத்திறனை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. அதன் ஒரு பகுதியாக உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் உற்று நோக்கி, அவைகளை நம் கவனத்தில் கொண்டு, அவைகள் நமக்கு தெரிவிக்கும் செய்திகளை உள்வாங்கி, அவைகளைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும். ஏனென்றால் உலகில் உள்ள அனைத்தும், குறிப்பாக உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான அத்தாட்சிகளாகும்.

அல்லாஹ்வால் அருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அவனால் படைக்கப்பட்ட மனித சமுதாயமான நமக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நமது சிந்தனையை ஈர்க்கிறான்:

'(அல்லாஹ்) அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்கு பயன்தருவதைக் கொண்டு சமுத்திரத்தில் செல்லும் கப்பலிலும், இறந்த பூமியை உயிர்;ப்பிக்க வானத்திலிருந்து அல்லாஹ் பொழிவிக்கச்செய்யும் மழையிலும், எல்லாவிதமான கால்நடைகளையும் பூமியில் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கருமேகத்திலும், சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.'(அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 164 ஆம் வசனம்).

அருள்மறை குர்ஆனின் மேற்கண்ட வசனத்தை ஆய்வு செய்யும் ஒரு பொதுவான மனிதனின் கண்களுக்கு இறைமறைவசனம் குறிப்பிடும் செயல்பாடுகள் யாவும் இவ்வுலகில் அன்றாடம் நடைபெறும் சாதாரண நிகழ்வுகளாகத் தோன்றலாம். இரவும், பகலும் மாறி மாறி வருவதும், கடல்நீரில் மூழ்கிவிடாமல் சர்வ சாதாரணமாக கப்பல் கடல் நீரில் மிதந்து செல்வதும், வானத்திலிருந்து பொழியும் மழையினால் பூமி உயிர்பெறுவதும், காற்றும், கருமேகமும் வானத்தில் வலம் வருவதுமாகிய செயல்கள் அனைத்திற்கும் சில காரணங்கள் இருக்கலாம். அவற்றை நவீன விஞ்ஞானம், இயந்திரவியல் மற்றும் தர்க்கவாதம் கொண்டு விளக்கம் பெறலாம் என எந்தவித ஆச்சரியமும் இன்றி நவநாகரீக கால மனிதன் சிந்தனை செய்கிறான். நவீன விஞ்ஞானம் வெளிப்படையான பருப்பொருள் சார்ந்த உண்மைகளை உணர்த்துமேத் தவிர, இச்செயல்கள் யாவும் ஏன்? என்ற கேள்விக்கு ஒருபோதும் விடையளிப்பதில்லை. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment