நம் சிந்தனைக்கான அருள்மறை வசனங்கள்

குழந்தையின் முதல் உணவு - தாய்ப்பால் - மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமான அருட்கொடை..!

ஜசாக்கல்லாஹு ஹைரன் சகோதரர் - Mohammed Meera Sahib Sahib


அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய வல்ல அல்லாஹ்வின் பேரருளால்..!




'..உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்: அவனே அல்லாஹ். உங்களுடைய இறைவன். அவனுக்கே ஆட்சியதிகாரம். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனைவிட்டும்) நீங்கள் எப்படி திரு

ப்பப்படுகிறீர்கள்?. (அல்-குர்ஆன் அத்தியாயம் 39 ஸுரத்துல் ஜுமர் 6ஆம் வசனத்தின் ஒரு பகுதி) என அல்லாஹ் மனிதனை உருவாக்கியதைப் பற்றி அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்.

மனித இனத்தைப் படைத்து பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ், இவ்வுலகில் குறிப்பிட்ட ஒரு தவணை காலம்வரை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், மனித இனத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியிருக்கிறான். அவ்வாறு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றுதான் தாய்ப்பால் என்னும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு.

தாயின் கருவறையில் இருந்து வெளிவுலகிற்கு வரும் ஒரு குழந்தை, வெளிவுலகின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படத் தகுந்த உடலமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். பிரசவ நேரத்திலும், பிரசவத்திற்குப் பின்பும் இவ்வாறு செயல்படத் தகுந்த உடலமைப்பைப் பெறுவதற்குரிய எல்லா வசதிகளையும் தாயின் உடல், குழந்தைக்கு வழங்குகிறது. இவ்வாறு ஒரு தாயின் உடல் குழந்தைக்கு வழங்கும் வசதிகளில் ஒரு சிறந்த உதாரணம் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் தாய்ப்பால்.

தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களிலிருந்து உருவாகிறது தாய்ப்பால். மூளையின் உட்பகுதியில் உள்ள 'ப்ரோலேக்டீன்' (Prolactin) என்னும் ஹார்மோன் தாய்ப்பாலைச் சுரக்க வைக்க அடிப்படை காரணியாக அமைந்துள்ளது. ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும் வேளையில் (அதாவது பிரசவதற்திற்கு முன்) தொப்புள்கொடியால் உருவாக்கப்படும் 'ப்ரோகெஸ்ட்ரோன்' (Progesterone) மற்றும் 'அஸ்ட்ரோஜன்' (Oestrogen) என்றழைக்கப்படும் ஹார்மோன்கள், தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் 'ப்ரோலேக்டீன்' (Prolactin) ஹார்மோனை - தாய்ப்பாலை உற்பத்தி செய்யவிடாமல் தடுக்கும் காரணிகளாக அமைகின்றன. ஆனால் குழந்தை பிறந்த பிறகு தாயின் இரத்தத்தில் 'ப்ரோகெஸ்ட்ரோன்' (Progesterone) மற்றும் 'அஸ்ட்ரோஜன்' (Oestrogen) என்றழைக்கப்படும் ஹார்மோன்களின் அளவு குறைந்துவிடுவதால், 'ப்ரோலேக்டீன்' (Prolactin) ஹார்மோனின் செயல்பாடு அதிகரித்து தாய்ப்பால் சுரக்கிறது. இந்த ஹார்மோன்களுக்கிடையே அமைந்துள்ள துரிதமாகத் தொடர்பு கொள்ளும் திறன், அல்லாஹ்வின் அருட்கொடையான தாய்ப்பால் என்னும் மிகச் சிறந்த ஊட்டச்சத்து குழந்தைக்கு தேவைப்படும் சரியான நேரத்தில் தாயின் மார்பிலிருந்து சுரக்க காரணமாகிறது.

நிச்சயமாக இந்நிகழ்வு மிகக் குறுகிய கண நேரத்தில் விபரங்களைக் கிரகித்துக்கொண்டு, அதன்படி நடக்கக்கூடிய ஓர் அற்புதச் செயலாகும். ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும் வேளையில் அவளது உடலிலேயே தொப்புள்கொடி இருந்தாலும், கர்ப்பமுறாத மற்ற நாட்களில் தாய்ப்பால் சுரப்பதில்லை. ஆனால் குழந்தை பிறந்த உடன், குழந்தைக்குத் தேவையான சரியான நேரத்தில் தாய்ப்பாலைச் சுரக்க வைப்பது அல்லாஹ்வின் படைப்பாற்றலில் ஓர் அற்புதம். மனித வாழ்வில் மிக முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் இச்சிறிய நிகழ்வு பெரும் பங்கு வகிக்கிறது. இச்சிறிய அற்புதமான நிகழ்வு, மனித குலம் முழுவதும் ஓர் ஒப்புயர்வற்ற படைப்பாளனால் உருவாக்கப்பட்டது என்பதற்கு மிகப்பெரிய அத்தாட்சியாக விளங்கி நிற்கிறது.

இந்த அற்புத நிகழ்வு மனித உயிர் தாயின் கர்ப்பப்பையிலிருந்து, இவ்வுலகிற்கு வந்த பிறகும் தொடர்கிறது. தாயின் மார்பில் சுரக்கும் தாய்ப்பால், குழந்தையின் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கிறது. முதல்நாள் 50 மில்லி கிராம் அளவே சுரக்கும் தாய்ப்பால், 6 மாதங்களில் குழந்தையின் தேவைக்கு ஏற்ப 1 லிட்டர் அளவு வரை சுரக்கிறது.

தாய்ப்பாலைப் போன்று செயற்கையான தாய்ப்பாலை உற்பத்தி செய்வதற்கு என நீண்ட நாட்கள் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தோல்வியைச் சந்தித்தனர். ஏனெனில் தாய்ப்பாலின் தரம் எல்லா வேளைகளிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொரு தாயின் உடலிலிருந்து சுரக்கும் தாய்ப்பாலும், அவர்களது குழந்தைகளின் தேவைக்கு ஏற்றவாறு வித்தியாசமான தரத்தைக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் இயற்கையாக உருவாகாமல், தாய்ப்பால் செயற்கையான உருவாக்கப்பட்டால், அதன் தரம் ஒரே விதமாகவே அமையும். மேலும் தாயின் உடலிலிருந்து சுரக்கும் தாய்ப்பாலின் தரம் வேறு எந்த ஊட்டச் சத்திலிருந்தும் பெற முடியாத அளவுக்குள்ள புரதச் சத்துக்களையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டதாகும். தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்களும், இரும்புச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தையின் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாகின்றன என்பது நீண்டகாலம் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கருத்து.

தாய்ப்பாலுக்கும் மற்றுமுள்ள ஊட்டச்சத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்:

தாய்ப்பால் அல்லாத மற்றுமுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் அனைத்துத் தேவைகளையும் முற்றிலுமாக பூர்த்தி செய்வதில்லை. உதாரணத்திற்கு குழந்தையின் நோய் எதிர்ப்புத் தன்மைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த ஊட்டச் சத்திலும் கிடையாது.

இன்றுவரை பசும்பால், குழந்தைகளுக்கான மிகச்சிறந்த ஊட்டச்சத்தாக கருதப்பட்டு வருகிறது. எனவே பசும்பாலை, தாய்ப்பாலுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, பசும்பாலைவிட தாய்ப்பால் எத்தனை சிறப்பானது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். பசும்பால் புளிக்கும் தன்மை கொண்டதால், பசும்பாலில், தாய்ப்பாலைவிட புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இந்த புரதச்சத்து வயிற்றில் சென்று குழந்தைகளின் செரிமான அமைப்பு செரிக்க முடியாத அளவுக்கு பெரிய, பெரிய துண்டுகளாக உடைந்துவிடுவதால், குழந்தைகளுக்கு செரிமான கோளாறை ஏற்படுத்துகிறது. எனவே பசும்பால் செரிப்பதற்கு கடினமானது. ஆனால் தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்து, குழந்தையின் செரிமான அமைப்பு செரிக்க கூடிய வகையில் குறைந்த அளவே உள்ளதால் எளிதாக செரிக்கக் கூடிய தன்மை உடையது.

தாய்ப்பால் மற்றும் பசும்பால் ஆகிய இவ்விரண்டிலும் அமினோ ஆசிட்டின் கலப்பு விகிதம் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. அமினோ ஆசிட் அதிக அளவுள்ள பசும்பால் குழந்தைகளுக்குப் புகட்டப்படும்போது, குழந்தையின் இரத்தத்தில் அமினோ ஆசிட் அதிகம் கலந்து விடுகிறது. இதனால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் மற்றும் சிறுசீரகம் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பாலுக்கும், பசும்பாலுக்குமுள்ள மற்றொரு வித்தியாசம் அவைகளில் உள்ள சர்க்கரையின் அளவு. பசும்பாலில் (L / 4.8g) அளவே சர்க்கரைச் சத்துள்ளது. ஆனால் தாய்ப்பால் (L / 7g) அளவில் சர்க்கரைச் சத்தைக் கொண்டுள்ளது. தவிர தாய்ப்பாலைவிட, பசும்பால் விரைவில் கெட்டியாகும் தன்மை கொண்டது என்ற காரணத்தால், குழந்தைகளின் மிகச்சிறிய உணவுப்பாதையின் வழியாக கடந்து செல்லும் பசும்பால், செரிமான பகுதியை அடைவதற்கு அதிக தாமதமாகிறது. எனவே குடல்கள் பலமடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள சர்க்கரைத் தன்மை சிறுகுடலிலேயே உறிஞ்சப்பட்டு விடும். மேற்படிச் சத்து பெருங்குடலை அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் தாய்ப்பால் தாமதாகக் கெட்டியாகும் தன்மை கொண்டது என்பதால், குடல்கள் வலுவடைவதற்குக் காணரமாக சர்க்கரைத் தன்மை சிறுகுடல், மற்றும் பெருங்குடல் ஆகிய இரு பகுதிகளிலும் எளிதாக சென்று பரவி, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இரண்டும் வலுவடைய காரணமாக அமைகிறது. மேலும் தாய்ப்பாலில் உள்ள அதிக அளவுள்ள சர்க்கரைத் தன்மை நரம்பு மண்டலங்களை ஒன்றிணைக்க உதவியாக அமையும் 'ஸெரிப்ரோசைட்' என்னும் கலவை உருவாகவும் காரணமாகிறது.

மேலும், தாய்ப்பாலிலும், பசும்பாலிலும் உள்ள கொழுப்பின் சதவிகிதம் ஒரே அளவே காணப்பட்டாலும், அவைகளின் தன்மை வேறுபடுகிறது. குழந்தைக்கு ஊட்டச் சத்தை வழங்கும் 'லினோலிக் ஆசிட்' என்னும் கொழுப்புச் சத்து தாய்ப்பாலில் மாத்திரமே உண்டு.

தாய்ப்பாலிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் அது கொண்டுள்ள தாதுப்பொருட்கள், மற்றும் உப்புச்சத்துக்களின் அளவு. உதாரணத்திற்கு பசும்பாலில் சுண்ணாம்புச் சத்து, மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவு உள்ளது. ஆனால் சுண்ணாம்புச் சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவைகளுக்கிடையே உள்ள கலப்பு விகிதம், பாலின் செரிமானத் தன்மையைக் கடினமாக்குகிறது. பசும்பாலிலுள்ள பாஸ்பரஸ் சுண்ணாம்புச் சத்துடன் கலந்து, பாலின் செரிக்கும் தன்மையைக் கடினமாக்குகிறது. எனவே பிறந்த முதல்நாள் பசும்பால் குடிக்கும் குழந்தையின் உணவுப் பாதை பாதிக்கப்படுவதோடு, இரத்தத்திற்குத் தேவையான அளவு சுண்ணாம்புச் சத்தும் கிடைக்காமல் போகிறது.

மேலும் தாய்ப்பாலில் 50சதவீதம் இரும்புச்சத்து உள்ளது. ஆனால் பசும்பாலில், தாய்ப்பாலைவிட குறைந்த அளவே இரும்புச்சத்து உள்ளது. எனவே இரும்புச்சத்து குறைவாக உள்ள பசும்பால் அருந்தும் குழந்தைகள், இரத்தசோகை நோயால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

தாய்ப்பாலில் உள்ள வைட்டமின்கள், குழந்தைகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மேலும் தாய்ப்பால் மற்றும் பசும்பால் இவையிரண்டும் கொண்டிருக்கும் வைட்டமின்கள்களின் விகிதாச்சாரம் முற்றிலும் வித்தியாசமானது. தாய்ப்பால் மற்றும் பசும்பால் இவையிரண்டிலும் வைட்டமின் A - ன் அளவு ஒரே அளவே இருப்பினும், மற்றுமுள்ள வைட்டமின்களான E, C, & K போன்றவை பசும்பாலைவிட தாய்ப்பாலின் அதிக அளவு காணப்படுகின்றன. தாய்ப்பாலில் வைட்டமின் E குழந்தைகளின் தேவையைப் நிறைவேற்றிடும் வகையில் போதுமான அளவு உள்ளது.

குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் உணவு - தாய்ப்பால்

நோய்க்கிருமிகள் இல்லாத, பாதுகாப்பான தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளிவுலகிற்கு வரும் குழந்தைகள், இவ்வுலகில் உள்ள எண்ணற்ற நோய்க்கிருமிகளை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்புத் தன்மையை கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுவதை தடை செய்யும் பணி தாய்ப்பாலின் குணநலன்களின் மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலின் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும் நோய் எதிர்ப்புச் சக்தி, குழந்தைகள் இதுவரை அறிந்திராத நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போரிடும் சக்தியை வழங்குகிறது. 'கொலஸ்ட்ரம்' என்னும் நோய் எதிர்ப்புச் சக்தி, குழந்தை பிறந்து முதல் வாரத்தில் மட்டும் தாய்ப்பாலுடன் சுரக்கிறது. பிறந்த முதல் வாரத்தில் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் உடலில் 'கொலஸ்ட்ரம்' புகுந்து, மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, மனிதன் இவ்வுலகில் உயிர் வாழும் காலம்வரை அவனது உடலில் தங்கியிருக்கிறது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியில் மிகைத்தவைகளாக இருக்கின்றன. எனவே தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு வயதுவரை பாலூட்டுவது அவசியமாகும் என ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சமீப காலத்தில் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சமீப காலத்தில் கண்டறிந்த இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அருள்மறை குர்ஆன் பறைசாற்றி நிற்பதைப் பாரீர்:

'நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம், அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக(க் கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்: இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன: ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக, என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அத்தியாயம் 31 ஸூரத்து லுக்மான் - 14வது வசனம்).

உலக மாந்தர்களே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த அற்புத அருட்கொடையை பயன்படுத்துங்கள். குறிப்பாக, தாய்மார்களே! உங்கள் அழகு கெட்டுவிடும் என்று உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்திவிடாதீர்கள். அல்லாஹ் வழங்கிய தாய்ப்பால் என்னும் இந்த அருட்கொடை உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நோயின்றி, ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுக்கும். அல்லாஹ் நம்மீது விதித்த கடமைகளை நாம் செயல்படுத்துவதுபோல், அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளை பயன்படுத்திக்கொள்வதும் நம்மீது கடமையாகும்.

எனவே தாய்மார்களே! புட்டிப்பாலை மறக்கடித்துவிட்டு, உங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுங்கள். அல்லாஹ் மேலும் உங்களுக்கு அருட்கொடைகளை வழங்குவான். உங்கள் வாழ்வை மேலும் அழகூட்டுவான். எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது கட்டளைகளை செயல்படுத்துபவர்களாகவும், அவனது அருட்கொடைகளை உதாசீனப் படுத்தாதவர்களாகவும் நம்மை ஆக்கி அருள்வானாக!.

No comments:

Post a Comment