ளாளன் (தொடர் 3)



அருளாளன் (தொடர் 3)
(கட்டுரை மதுரை அப்துல்லாஹ் மன்ஃபயி)


மனிதனின் உடலில் முக்கிய அங்கம் வகிப்பது தலையாகும். 'எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பார்கள். அந்த் தலையில் அடங்கியுள்ள மூளை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


மூளையை எத்தனை பாதுகாப்பாக அருளாளன் அமைத்துள்ளான். மற்ற உறுப்புக்களும் நன்கு பாதுகாப்பாக அமைந்திருப்பதும் உண்மைதான். விலா எலும்புக் கூட்டுக்குள்ளே பத்திரமாய் இருக்கின்றது. சுவாசப்பைகளும் இதயமும் விலா எலும்பின் முனைக்குக் கீழே கல்லீரலும், மண்ணீரலும் அமைந்துள்ளன. சிறுநீரகங்களோ கொழுப்புக்குள் திடமாகி, பின் முதுகின் உறுதியான தசைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இதெல்லாம் மூளையின் பாதுகாப்பு மாதிரி ஆகாது.

உறுதியான எலும்பினால் முழுதும் மூடப்பட்டுள்ளது மூளை. போதாக் குறைக்கு முதுகுத் தண்டுவட நீர் சூழ்ந்து நிற்பதால், அதன் மத்தியில் பத்திரமாக இருக்கிறது. அத்தகைய சிறப்புப் பெற்ற மனிதனை அழகிய வடிவிலே இறைவன் முழமையான தோற்றத்தில் அமைத்தான். இத்தகைய மனிதன், தன் மூளைய நல்வழியில் செலவழிக்கும்போது, சிறப்புற்றுத் திகழ்கின்றான். மாறாக, மனிதன் மனிதத் தன்மையை விட்டுமாறி, கொலை, கொள்ளை, குழப்பம், மண், பெண், பொன், குடி, கூத்து, கும்மாளம் எனத் திரியும்போது அவன் சைத்தானின் தன்மையை எய்துகிறான். உங்களுக்குள்ளேயும் அத்தாட்சிகள் உள்ளன என்கிறான் அருளாளன்.

மனிதத் தன்மை என்ற புனிதத்தன்மை இழக்காமல் இறைவனுக்கு வழிபட்டு ஏவல் விலக்கல்களை ஏற்று நடப்பானாயின், இனியத் தன்மை ஏற்று இறையருளைப் பெற்று விடுகிறான்.

'(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக! அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன, (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (அத்தியாயம் 15 ஸூரத்துல் ஹிஜ்ர் - 3வது வசனம்).

வல்ல அருளாளன் தன் அருட்கொடைகளை வாரிவாரி வழங்கிக் கொண்டே இருக்கிறான்.

'நிச்சயமாக அல்;லாஹ்; தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்: (தான் நாடியோருக்குச்) சுருக்கியும்விடுகிறான், என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அத்தியாயம் 30 ஸூரத்துர் ரூம் - 37வது வசனம்).

'மனிதனுக்கு அவனுடைய வயது அறுபது ஆகின்றவரை அல்லாஹ் அவனுடைய ஆயுளைப் பிற்படுத்திவைத்து (பாவமன்னிப்புத் தேட) சந்தர்ப்பத்தை வழங்குகிறான்!' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதார நூல்: புகாரி).

மனிதனின் சராசரி வயது 60க்கும் 70க்கும் இடைப்பட்டதாகும். ஒரு மனிதன் 70 ஆண்டு காலம் வாழ்கிறான் என்றால், அவன் சாப்பிடுவதற்கு மட்டும் எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா?

சுமார் ஆறரை ஆண்டுகள்!

அதைவிட மலைப்பான விஷயம் என்ன தெரியுமா?

அவன் சாப்பிடும் உணவுப் பொருட்கள் பெரும் பெரும் கிடங்குகளில் அடைக்கும் அளவுக்கு உரிய உணவுகளைத் தின்ற தீர்க்கிறான். அவை

ரொட்டிவகைகளில் 20 டன்
அரிசி வகைகள் 60 டன்
கிழங்கு வகைகள் 18 டன்
பழ வகைகள் 12 டன்
காய்கறி வகைகள் 12 டன்
மாமிச வகைகள் 1.5 டன்
முட்டை 34,000
தண்ணீர் 25,000 காலன்
எனக் கணக்கிட்டு சர்வே எடுத்துள்ளனர்.

ஒரு மனிதனின் உணவே இவ்வளவு என்றால்,

10.04.2000 ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை 99,85,90,956 பேர்கள். (தொண்ணூற்று ஒன்பது கோடியே எண்பத்து ஐந்து இலட்சத்து தொண்ணூராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறு) பேர்கள். இத்துடன் உலக மக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஈ - கொசு - எறும்பு - புழு - பூச்சி உட்பட உயிரினங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் தம் வாழ்நாளில் உண்டு முடித்தவைகளையெல்லாம் பட்டியல் போடுங்கள். அட இவ்வளவா என்ற மலைப்ப தோன்றுகிறதல்லவா?

இது மட்டுமல்ல.

மனிதனின் வசதிக்காக அருளாளன் வழங்கிய அருட்கொடைகளில் பெட்ரோல் போன்ற மற்ற எண்ணெய் வகைகளும் உண்டு.

நாள்தோறும் அரபு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் அளவுகளைப் பாரீர்!

சவுதி அரேபியா 72,00,000 (எழுபத்து இரண்டு இலட்சம் பீப்பாய்கள்)
ஈரான் 61,00,000 (அறுபத்து ஒரு லட்சம் பீப்பாய்கள்)
குவைத் 34,00,000 (முப்பத்து நான்கு லட்சம் பீப்பாய்கள்)
ஈராக் 16,00,000 (பதினாறு லட்சம் பீப்பாய்கள்)
அபூதாபி 14,00,000 (பதினான்க லட்சம் பீப்பாய்கள்)
யமன் 2,80,000 (இரண்டு லட்சத்து என்பதினாயிரம் பீப்பாய்கள்)
பஹ்ரைன் 68,000 ( அறுபத்து எட்டு ஆயிரம் பீப்பாய்கள்)

இவைமட்டுமல்ல. இன்னும் பல நாடுகளில் இருந்தும் பெட்ரோல் அதிக அளவில் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அருள் வளமும் யாருக்காக?

'மனிதர்களுக்கு அல்லாஹ்; தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை: அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன்பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை, மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்: ஞானம் மிக்கவன்.' (அத்தியாயம் 35 ஸூரத்தல் ஃபாதிர் 2வது வசனம்). (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment