தொலைக்காட்சி - ஒரு நுண்ணோக்குப் பார்வை


தொலைக்காட்சி - ஒரு நுண்ணோக்குப் பார்வை -

பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன்

மூத்தோர் இட்ட பெயர்
'முட்டாள் பெட்டி'
இன்றோ அவனை பயன்படுத்திக்கொள்ளாதவர்
யாரும் 'புத்திசாலி'யே இல்லை.
பல்லாண்டுக்கு முன்
-ஒருநாள் ;தயங்கித் தயங்கி
அவன் உள்ளே நுழைந்தான்.
மெல்ல மெல்ல இல்லங்கள் தோறும்
உறுப்பினராய் ஆகிவிட்டான்.
நிரந்தமாகவே...



பன்னூறு முகங்கள் கொண்டவன்
என்றாலும் விவஸ்தையில்லாத
வேலைக்காரன்.
பெரியவர்களுக்கென்று
பொத்தி வைத்த சங்கதியை
குழந்தைகள் கேட்டாலும்
கொடுத்து விடுகிறான்.
விளையாட்டுக்கள் நிரம்பிய
எங்கள் குழந்தைகளின் சாயங்கால ப்பொழுதுகளையும்
பேரர்களின் குணாம்சம் வளர்க்கும்
பாட்டிகளின் நீதிக்கதைகளையும்
அவன் அபகரித்துக்கொண்டான்.

கம்பி வழியாய் உள்ளிறங்கி-
எங்கள் கலாசாரம் அழிக்கும்
அவன் முயற்சியில்
அந்நிய சதி அம்பலமாகிறது .
கல்வியின் நாற்றங்காலிலும்
அவன் இருக்கிறான் 'களை'யாய்.
கேட்டால் சொல்லுகிறார்கள் 'அதுவும் ஒரு கலை' என்று.

மழலை உள்ளங்களுக்கு
முன் மாதிரிகளாகிறார்கள்
வன்முறையால் தாக்கும் நடிகர்களும்
ஆபாசமே கூசும் நடிகைகளும்!
நெருப்பு வார்த்தைகளால்
நிஜ மருமகளை வதைக்கும்
மாமியாரும் அவன் உருக்கிக்காட்டும்
கற்பனை 'மருமகளு'க்காக
கண்ணீர் மழை பொழிந்து விடுவார்!

கற்பனைகளுக்கு அங்கீகாரம்
உண்மைக்கோ உதாசீனம்!
தொலைக்காட்சியை உற்று கவனிக்கும்
ஒவ்வொரு முறையும் கேள்வி எழுகிறது..
நாளைய உலகத்தின் பண்பாடு எது?
வருத்தமாய்த்தானிருக்கிறது என்றாலும்....
கத்தியை கோபித்து என்ன பயன்..?
கழுத்தை அறுப்பதும்
பழத்தை அறுப்பதும்
கரங்களின் வேலையல்லவா....?

No comments:

Post a Comment