ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய
சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே. இது ஏன்?


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவான்.
நன்றி சகோதரர் -முஹம்மத் மீரா  சாஹிப்  
பதில்:

அருள்மறை குர்ஆன் - வாரிசுகளுக்கு - முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி
சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின்
இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின்
240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின் 7முதல் 9வது வரையுள்ள
வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது
அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ்
குறிப்பிடுகின்றான்.

அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் னிஸாவின் 11 மற்றும் 12 வது வசனமும்
176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை
பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.

'உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும்
பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.
பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால்
அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம்
கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.' (அல்-
குர்ஆன் 4 : 11)

இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு
பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக்
குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு
மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள்
இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்).
இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும்
நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில்
யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள்
அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து
வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும்
மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 4 : 11)

இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை
இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை
இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான்.
(இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய
பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச்
சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை
இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு
பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும்
நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது
பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு
பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால்,
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக
இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள
வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய
பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும்
நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும்
அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும்
இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:12)

'(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள்
இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்.
நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்: ஒரு மனிதன்
இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும்
இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு.
யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து
முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற
சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன்
பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய
பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ்
உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு
அறிந்தவனாக இருக்கின்றான்.' (அல்-குர்அன் 4 : 176).

சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி
பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் - தனக்கு
வாரிசுகள் எதுவுமின்றி - தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் -
(அதாவது ஒரு மகனும் - மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் - இறந்து போனவர்
விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே - அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி
நபருக்கு வாரிசுகள் இருந்தால் - இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது
பெற்றோருக்கும் - கிடைக்கும்.

சில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை
தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக
இருந்து - அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர - சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் -
அவரது கணவருக்கும் - இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு
என்னவெனில் - கணவருக்கு பாhதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய - தாயாருக்கு(உயிரோடு
இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் - தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது
போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - ஆணுக்கு கிடைக்கும் சொத்தின்
பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.

ஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட - ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின்
பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக
கொள்ளலாம்:

1. மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு - மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.
2. இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் - இறந்த போனவரின்
தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு
பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.

3. இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் - இறந்த போனவரின் தாயாருக்கு
நான்கில் ஒரு பகுதியும் - இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும்
சொத்தில் பங்காக கிடைக்கும்.

4. இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் - அவரது
சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.
இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும்
பொறுப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின்
கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும்
பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில்
குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது
கடமையாக்கப்பட்டுள்ளது.

மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும்
பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு இரண்டு வாரிசுகளை உடைய ஒரு மனிதர் (ஒரு மகன், ஒரு மகள்)
இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000
மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் - இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம்
மதிப்புள்ள சொத்துக்களும், மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது
பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற
மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக்
கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்த
சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) - அவர்
குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு - எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை
மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய்
மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் - அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும்
செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார
சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க
முடியும்.

இஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம்
மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து
விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் - ஒரு
இஸ்லாமிய ஆண்வாரிசா? அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது
பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள
சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா?.
 

No comments:

Post a Comment