‘அல்பகரா' அத்தியாயத்தின் சிறப்பு


‘அல்பகரா' அத்தியாயத்தின் சிறப்பு

Posted by Sis Yasmin Riazdeen Date: 20 Feb 2012

திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான "அல்பகரா' அத்தியாயம் முழுக்க மதீனா நகரில் அருளப்பெற்றது (மதனீ) என்பதில் விரிவுரையாளர்களிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. 286 வசனங்களைக் கொண்ட இவ்வத்தியாயத்தில் 281ஆவது வசனம் மட்டும் நபி (ஸல்) அவர்கள் செய்த "விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்கா அருகிலுள்ள) மினாவில் அருளப்பெற்றது. இஸ்லாத்தின் துவக்கக் காலத்தில் அருளப்பெற்ற அத்தியாயங்களில் அல்பகராவும் ஒன்றாகும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (குர்ஆன் ஓதாமல் இருப்பதன் மூலம்) சவக்குழிகளாக ஆக்கி விடாதீர்கள். "அல்பகரா' அத்தியாயம் ஓதப்பட்டுவருகிற இல்லத்தில் நிச்சயமாக ஷைத்தான் நுழைவதில்லை. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு பொருளுக்கும் திமில் (உயரமான பகுதி) என்று ஒன்று உண்டு. குர்ஆனின் திமில் (உயரமான பகுதி) "அல்பகரா' அத்தியாயமாகும். யார் தமது இல்லத்தில் ஓரிரவு அதை ஓதுகிறாரோ அவ்வில்லத்தில் மூன்று இரவுகள் ஷைத்தான் நுழைவதில்லை. 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) பெரும் எண்ணிக்கை கொண்ட படை ஒன்றை அனுப்பினார்கள். அப்(படைக்குத் தளபதி ஒருவரைத் தேர்வு செய்யும்) போது, அப்படை வீரர்கள் ஒவ்வொருவரையும் குர்ஆனில் அவரவருக்குத் தெரிந்ததை ஓதிக்காட்டுமாறு நபியவர்கள் சொன்னார்கள். வீரர்கள் தமக்குத் தெரிந்தவற்றை ஓதலானார்கள்.அப்போது இளம்வயது வீரர் ஒருவரிடம் வந்த நபியவர்கள் "இன்ன மனிதரே! (குர்ஆனில்) உமக்கு என்ன தெரியும்?'' என்று கேட்டார்கள். (சில அத்தியாயங்களைக் குறிப்பிட்டு) "எனக்கு இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும். "அல்பகரா' அத்தியாயமும் தெரியும்'' என்று அவ்வீரர் சொன்னார். "என்ன! உமக்கு "அல்பகரா' அத்தியாயம் தெரியுமா?'' என்று (ஆச்சரியத்தோடு) நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "ஆம்' என்றார். "அப்படியானால், இப்படைக்கு நீர்தான் தளபதி; செல்க'' என்று அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனை ஓதி வருபவர்களுக்கு மறுமையில் அது இறைவனிடம் பரிந்துரை செய்யும். ஒளி விளக்குகளான (அல்பகரா, ஆலு இம்ரான் ஆகிய) இரு அத்தியாயங்களை ஓதுங்கள்.ஏனெனில், அவை மறுமையில் (நிழல் தரும்) மேகங்களைப் போன்றோ, அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து, தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். "அல்பகரா' அத்தியாயத்தை ஓதிவாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கைவிடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்குமுன் சூனியக்காரர்கள் செயலிழந்துபோவார்கள். 

நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது: "குர்ஆனும் குர்ஆனின்படி செயலாற்றியவர்களும் மறுமை நாளில் அழைத்துவரப்படுவர். அப்போது "அல்பகரா' மற்றும் "ஆலு இம்ரான்' ஆகிய இரு அத்தியாயங்களும் முன்நின்று அவர்களை அழைத்துச் செல்லும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

நாள்தோறும் வாசியுங்கள் திருக்குர்ஆன் விரிவுரை - தஃப்சீர் இப்னு கஸீர்

No comments:

Post a Comment