'மா' மரமும், மனிதனும்..!



அளவிலா கருணையும், இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்..!


'மா' மரமும், மனிதனும்..!


(கட்டுரை முஹம்மது மீராசாகிப்)

பெரிதாக வளர்ந்திருந்த அந்த மாமரம் ஊரின் கடைக்கோடியில் இருந்தது. ஒரு சிறுவன் தினந்தோறும் அந்த மாமரநிழலில், அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவான். மாமரத்தின் கனிகளை உண்பான். அந்த மாமரத்தின் மீதேறி விளையாடுவான். சில வேளைகளில் அதன் கிளைகளில் கண்ணயர்ந்திருக்கிறான். அச்சிறுவன் அந்த மாமரத்தை விரும்பினான். மாமரமும் அச்சிறுவனை விரும்பியது.

காலம் கடந்தது. சிறுவன் வளர்ந்து விட்டான். முன்புபோல் அந்த மாமரத்தைச் சுற்றி விளையாடுவதை மறந்துவிட்டான் வளர்ந்துவிட்ட சிறுவன். ஒருநாள் மாமரத்தின் அருகில் கவலையோடு வந்தமர்ந்தான் சிறுவன். ''வா! என்னருகில் வந்து விளையாடு'' என சிறுவனை வேண்டியது மாமரம். ''நான் ஒன்றும் மாமரத்தைச் சுற்றி விளையாடும் அளவுக்குச் சிறுவன் அல்ல'' என பதிலளித்தான் அச்சிறுவன். 'எனக்கு பொம்மைகள் வாங்க பணம் வேண்டும்'' என மாமரத்தைப் பார்த்துக் கேட்டான் சிறுவன். ''உனக்குத் தர என்னிடம் பணம் இல்லையே'' என மாமரம் வருத்தத்தோடு பதிலளித்தது. ''ஆயினும் ஒரு மார்க்கம் உண்டு. என்னிடமுள்ள மாங்கனிகளை விற்று உனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்'' என மாமரம் கூறியது. வியந்துபோன சிறுவன், மரத்திலுள்ள அனைத்து கனிகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

பழங்களுடன் சென்ற சிறுவன் சிறது காலம் வரை மாமரத்தின் பக்கம் வரவில்லை. மாமரமோ சிறுவனின் வருகையை எதிர்பார்த்து வருத்தத்துடன் காத்திருந்தது. வருடங்கள் உருண்டோடின. ஒருநாள் வளர்ந்து, வாலிபனாகி விட்ட சிறுவன் மாமரத்தைக் காண வந்தான். இளைஞனைக் கண்டு வியப்புற்ற மாமரம், ''வா! என்னருகில் வந்து விளையாடு'' என்று இளைஞனைக் கேட்டுக் கொண்டது. ''விளையாடவெல்லாம்; எனக்கு இப்போது நேரமில்லை. எனது குடும்பத்திற்காக நான் உழைக்க வேண்டும். நான் தங்குவதற்கு ஒரு வீடு வாங்க வேண்டும். வீடு வாங்குவதற்கு எனக்கு உதவி செய்வாயா?'' என மாமரத்தைப் பார்த்துக் கேட்டான் இளைஞன். ''உனக்கு வீடு தந்து உதவுவதற்கு என்னிடம் வீடு இல்லை'' என வருத்தத்துடன் பதிலளித்த மாமரம், ''வேண்டுமெனில் எனது கிளைகளை வெட்டி எடுத்து, உனது வீட்டைக் கட்டிக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்'' என கூறியது. மாமரம் கூறியதுபோல, அதன் கிளைகள் அனைத்தையும் வெட்டியெடுத்துக் கொண்டு, சந்தோஷமாய்த் திரும்பிச் சென்றான் இளைஞன். சந்தோஷமாய்ச் சென்ற இளைஞனைக் கண்டு மாமரமும் மகிழ்ச்சியுற்றது. இதன் பிறகும் நீண்ட நாட்களாக அந்த மாமரத்தின் பக்கமும் வரவில்லை இளைஞன். இளைஞனைக் காணாத மாமரம், தன்னந்தனியே, வருத்தத்துடன் காத்திருந்தது.

மீண்டும் சில வருடங்கள் கழிந்தன. கோடைகாலத்தின் வெப்பம் அனலாய் வீசியது. மீண்டும் அந்த மனிதன் மாமரத்தின் அருகே வந்தான். அந்த மனிதனைக் கண்ட மாமரம் மகிழ்ந்து ''வா! என்னருகில் வந்து விளையாடு'' என்று வேண்டியது. ''எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. ஆற்றின் அக்கரைக்குச் சென்று நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். ஆற்றை கடக்க எனக்கு படகு ஒன்று தேவைப்படுகிறது. எனக்கு படகு ஒன்றைத் தருவாயா?'' என மாமரத்திடம் அந்த மனிதன் வினவினான். ''எனது நடுப்பகுதியை வெட்டி படகு செய்து கொள். அந்த படகின் மூலம் ஆற்றைக் கடந்து, நீ ஓய்வெடுக்கலாம்'' என அந்த மாமரம் பதிலளித்தது. அதன்படி அந்த மனிதனும், அந்த மாமரத்தின் நடுப்பகுதியை வெட்டி படகு செய்து கொண்டு, ஆற்றைக் கடந்து போனான். அதன் பிறகு பல வருடங்கள் அந்த மனிதன் மாமரத்தின் பக்கம் தலைகாட்டவேயில்லை.

இறுதியாக ஒருநாள் அந்த மனிதன் வயதாகி தள்ளாடியவனாக அந்த மாமரத்தின் பக்கம் வந்தான். ''உனக்கு தருவதற்கென என்னிடம் ஒன்றுமேயில்லை. எனவே என்னிடம் எதையும் கேட்டுவிடாதே!'' என மாமரம் அந்த மனிதனைக் வேண்டிக் கொண்டது.

''நீ உருவாக்கும் கனிகளைக் கடித்து உண்ணக் கூடிய அளவுக்கு என்னிடம் பற்கள் இல்லை: ''உனது கிளைகளின் மீது ஏறி விளையாட முடியாத அளவுக்கு எனக்கு வயதாகிவிட்டது'' எனவே எனக்கு ஒன்றும் தேவையில்லை என அந்த மனிதன் கூறினான்.

''என்னிடம் உள்ளதெல்லாம் இன்றோ நாளையோ என மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எனது அடிவேர்கள் மாத்திரமே!. அதைத் தவிர என்னிடம் ஒன்றுமே இல்லையே'' என மாமரம் கண்ணீருடன் கூறியது.

''வயதாகிவிட்டதால், இப்போதைக்கு எனக்குத் தேவை ஓய்வெடுப்பது மாத்திரமே!'' என்றான் அந்த மனிதன்.

''நன்று! வயதான மரத்தின் அடிவேர்தான் மனிதர்கள் உறங்கவும் ஓய்வெடுக்கவும் சிறந்த இடம். வா! வந்து அமர்ந்து ஓய்வெடு!'' என மந்த வயதான மரம் அந்த மனிதனுக்குச் சொன்னது.

அந்த மனிதனும் வயதான அந்த மரத்தின் வேர்களில் மகிழ்ச்சியுடன் அமர்ந்தான். அந்த வயதான மாமரமும் மகிழ்ச்சிப் பெருக்கில், ஆனந்த கண்ணீர் வடித்தது.

அந்த மனிதன்தான் நாம். வயதான அந்த மாமரம்தான் நமது பெற்றோர்.
மனிதர்களே! பெற்றோரைப் பேணுவோம்!

பெற்றோரைப் பேண வேண்டும். அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்பது பற்றி அருள்மறை குர்ஆன், கூறுவதைச் சிந்தித்துப் பாருங்கள்!

''அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்: அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக: மேலும்,'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!'' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 17 ஸூரத்து பனீ இஸ்ராயீல் 23 மற்றும் 24ஆம் வசனங்கள்).

பெற்றோரை குறிப்பாக அன்னையரை அதிகமாக கண்ணியப்படுத்த வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம்;, ''அல்லாஹ்வின் தூதரே! உறவுகளில் அதிகம் போற்றத்தக்கவர் யார்? என வினவினார். ''உங்களது தாய்'' என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?'' என அந்த மனிதர் வினவினார். ''உங்களது தாய்'' என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?'' என மேலும் அந்த மனிதர் வினவினார். ''உங்களது தாய்'' என மீண்டும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ''அடுத்தது யார்?'' என மேலும் அந்த மனிதர் வினவினார். ''உங்களது தந்தை'' என முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 2548, புகாரி - ஹதீஸ் எண்: 5971).

எனவே மனிதர்களாகிய நாம் பெற்றோரைப் பரிவுடன் பேணுவோம். பேரருளாளன் அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment