அருளாளன்..!(தொடர் 1)

அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்..!

அருளாளன்..!(தொடர் 1)
(கட்டுரை: மதுரை அப்துல்லாஹ் மன்பயீ) 

'மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களை சிந்தித்துப் பாருங்கள். வானத்திலும், பூமியிலும் இருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறு இருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப் படுகிறீர்கள்.' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 35 ஸூரத்தல் ஃபாத்திர் 3வது வசனம்).

அறையின் மூலையிலே - சிலந்தி ஒன்று வட்டமிட்டது.

என்னை அறியாமல் என் விழிகள் அதிலே பதிந்தன. தனக்கே உரிய அந்தரங்க தறியிலே அது அமைதியாக நெய்து கொண்டு இருந்தது.

அஞ்சாது-அயராது-உள்ளம் துவளாது- கருமமே கண்ணான கலைஞனைப் போல - மயன் வியக்கும் மாளிகை ஒன்றை அங்கே படைத்துவிட்டது.

இதயத்தைத் தன்பால் ஈர்க்கும் பட்டு இழைகளால் உருவான அந்த சிலந்திவலை மனித சக்திக்கே ஒரு சவால்.

படைப்பின் விநோதமே அந்தரங்கமானதுதான். ஒருக்கால் - காலமும் சிலந்தி வலைதானோ?.

விதியின் தறிகளும் காலத்தைச் சுற்றிப் பின்னுகின்றன. இழை இழையாக வலை வளர்கிறது. ஆம்! நமது உள்ளத்தைச் சுற்றி அன்பெனும் நூல் இழை விடுகிறது. பல இதயங்களை பந்தபாசத்தில் பின்னிப்பிணைத்து விடுகிறது இந்த அன்புவலை.

சிலந்திவலையை சில நிமிடங்களிலேயே சிதைத்து விடமுடியும்! ஆனால்..

உலக ஆசை எனும் வலையை? பந்த பாசத்தை? அந்த அன்பு வலையை?.

கற்பனைக்கெட்டாத தறி நெய்யும் சிலந்தியைத்தான் தன் நாவினால் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

'அல்லாஹ்; அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம்: சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது: அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின்) பலஹீனத்தை அறிவார்கள்.' (அருள்மறை குர்ஆன் ஸூரத்துல் அன்கபூத் 41வது வசனம்).

சிலந்தி தனக்குத் தெரிந்த அpறவைக்கொண்டு சிறப்பாக தனக்கென ஒரு இருப்பிடத்தைக் கட்டிக் கொள்கிறது.

'உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள். (அத்தியாயம் 16 ஸூரத்துன் நஹ்ல் 68வது வசனம்).

தேனீ தனக்கென உள்ள ஞானத்தைக் கொண்டு ஒரு கூட்டைக் கட்டிக் கொள்கிறது.

மற்ற பறவைகளும் அழகாகக் கூடு கட்டுகின்றன. தூக்கணாங் குருவி தனது கூட்டை கட்டிட எங்கும் சென்று படித்துப் பட்டம் பெற்று வரவில்லை. பின் யார் இதற்குக் காரணம்?

கறையான் புற்றுக்கள் தோன்ற யார் காரணம்?

அந்த அருளாளன் காற்றை இரண்டு வகையாக படைத்துள்ளான். பூமியிலும் காற்று உண்டு. நீரிலும் காற்று உண்டு. பூமியின் உள்ளவன் நீரினுள் சென்றால், மூழ்கி மடிகிறான். நுPரில் உள்ள மீன்கள் - பிராணிகள் பூமிக்கு வந்தால் மடிகின்றன.

அருளாளன் என்கிறோமே: ஏன் அவன் இப்படி அமைத்தான்?

நீரில் உள்ளவை பூமிக்கும், பூமியின் மேலே உள்ளவர்கள் நீரிலும் செல்ல முடியுமானால்..? எவ்வளவு விபரீதம் ஏற்படும்?..

பெரும் பெரும் கடல் விலங்குகளுக்கு மனிதன் இரையாவான் அல்லவா?

முழு நிலவு அன்ற கடற்கரை ஓரத்தில் நின்று பார்க்கும்போது கடல் அலைகள் 20 முதல் 30 அடிகள் வரை உயர்ந்து, அதே வேகத்தில் விரைந்து கரையை நோக்கிப் பாய்ந்து வருவதைக் காணலாம்.

பூமியிலிருந்து இரண்டரை லட்சம் மைல்கள் தூரத்தில் இருப்பதினால் இந்த அளவுக்குக் கடல் மட்டம் ஏற, இறங்க வசதியாக உள்ளது.

ஆயிரம், இரண்டாயிரம் மைல்கள் குறைந்து பூமியின் பக்கம் சந்திரன் இருந்தால் இந்தப் பூமியின் கதி என்னவாகும்?.

கடல் மட்டத்திற்கு மேல் 200 அல்லது 300 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்து இந்தப் பூமி முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இப்படி மூழ்க நேர்ந்தால் பூமியில் வாழும் தாவரங்கள், ஊர்வன, பறப்பன, நடப்பன என எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் அபாயம் உண்டு.

இது யார் ஏற்பாடு? ஏன் செய்ய வேண்டும்? (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment