அருளாளன் (தொடர் - 2)



அருளாளன் (தொடர் - 2)


கட்டுரை மதுரை அப்துல்லாஹ் மன்ஃபயீ


'அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான். (மனிதனே!) அர் ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர். பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஒரு பிளவைக் காண்கிறாயா?.

'பின்னர் இரு முறை உன் பார்வையை மீட்டிப்பார். உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 67 ஸூரத்துல் முல்க் - 3வது மற்றும் 4வது வசனங்கள்).

நல்லோன், தீயோன் என்கிற பாகுபாடுன்றி எல்லேருக்குமே வாரி வாரி தன் அருள் வளத்தை வழங்கிக் கொண்டு இருக்கிறான் இந்த அருளாளன்.

'வெள்ளையனுக்கு மட்டும் வெளிச்சம் தருவேன்! என்று வானச்சூரியன் வாக்குறுதி வழங்குவதில்லை.

'அரபியர்க்கு மட்டும் அருவியாகக் கொட்டுவேன்!' என்று ஆகாயமழை அடம்பிடிப்பதில்லை!

'இத்தாலியரை மட்டும் தான் இதமாகத் தழுவிச்செல்வேன்!' என்று இளந்தென்றல் இடக்குச் செய்வதில்லை!

கல்லினுள் தேரைக்கும் உணவளிக்கிறான். மரம் வைத்தவனைத் தண்ணீர் ஊற்ற வைக்கிறான்.

காற்றும், நீரம், கதிரொளியும் எப்படி எல்லோருக்குமி சொந்தமோ அப்படியே இஸ்லாமியக் கொள்கைகளையும் அனைவருக்கும் சொந்தமாக்கினான். அதனை பின்பற்றியோர் நேர்வழிபெறச் செய்தான். மனிதர்கள் மீது எவ்வளவு பேரருள் புரிந்துள்ளான் அந்த அருளாளன்.

இருப்பினும் அவன் அருளை அனுபவித்துக் கொண்டு மனிதர்கள் ஏன் அவனுக்கு மற்றவர்களை இணையாக்குகிறார்கள்.

'(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான், அல்;லாஹ்;வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.' (அத்தியாயம் 14 ஸூரத்து இபுறாகிம் - 34வது வசனம்).

முனிதன் அவன் அருட்கொடைகளை அனுபவித்துக் கொண்டு, அவனுக்கு நன்றியா செலுத்துகிறான்? மாறாக ஏதேனும் துன்பம் தீண்டினால் அந்த அருளாளனைத் திட்டியல்லவா தீர்க்கிறான்?

ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்கிறான். ஆண்டில் ஒரு சில தினங்கள் தலைவலி, உடல்வலி என ஏதேனும் தீண்டிவிட்டால், 'அடக் கடவுளே! உனக்குக் கண் இல்லையா?' எனக் கூப்பாடு போடுகிறான்.

தன் குடும்பத்தில் பரியமான ஒருவர் இறந்து விட்டால், 'அட ஆண்டவா? உனக்கு என் வீடுதானா கிடைத்தது?' என புலம்பித் தீர்க்கிறான்.

'நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்: அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.' (அத்தியாயம் 17 ஸூரத்து பனீஇஸ்ராயீல் - 83வது வசனம்).

மனிதனின் உடலில் கதவுகளாக இரு உதடுகளும், அதனுள் 32 பல் அரண்களும் காவலாக அமைத்து நரம்பு இல்லா நாவுக்கு பாதுகாப்பு கொடுத்தது யார்?

உடலில் தலையில் எல்லாப் பாகத்திலும் முடிவளர, உள்ளங்கையில் மட்டும் முடிவளராமல் தடுத்தது யார்?

அந்த அருளாளன் அன்றி வேறுயாராக இருக்க முடியும்?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment